விளையாட்டில் இனவெறிக்கு இடமில்லை என்று பிசிசிஐ செயலாளர் ஜே ஷா கூறியுள்ளார்.
மும்பை,
சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. போட்டியின் 4-வது நாளான இன்று இந்திய அணி பந்துவீச்சில் ஈடுபட்டிருந்தது. அப்போது 2-வது செஷன் முடியும் தறுவாயில், இந்திய வீரர் முகமது சிராஜ் எல்லைக் கோடு அருகே ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த உள்நாட்டு ரசிகர்கள் சிலர், சிராஜைப் பார்த்து இனவெறியைத் தூண்டும் விதத்திலும், அவமதிப்புக்குரிய வார்த்தைகளைக் கூறியும் விமர்சித்துள்ளனர். ஏற்கெனவே நேற்று இதுபோன்ற சம்பவம் நடந்ததையடுத்து அது தொடர்பாக பிசிசிஐ சார்பில் போட்டி நடுவரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
டெஸ்ட் போட்டியில் இனவெறி விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்து உள்ளது.
இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜே ஷா கூறுகையில்,
சமூகம் மற்றும் எந்த ஒரு விளையாட்டிலும் இனவெறிக்கு இடமில்லை. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் இது குறித்து பேசினேன். அவர்கள் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்துள்ளனர்.
இந்த தருணத்தில் பி.சி.சி.ஐ மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒன்றாக நிற்கின்றன. இதுபோன்ற பாகுபாடு செயல்பாடுகள் பொறுத்துக்கொள்ளப்படமாட்டது என்றார்.