புதுச்சேரியில் கவர்னர் கிரண்பெடிக்கு எதிரான போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடியை கண்டித்தும், மத்திய அரசு அவரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் காங்கிரஸ், மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 8-ந் தேதி தர்ணா போராட்டம் தொடங்கியது. போராட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அவர் இரவு பகல் பாராமல் போராட்ட பந்தலிலேயே உறங்கினார். இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் நேற்று மாலை கலந்து கொண்டு பேசினார்.
இதற்கிடையே பொங்கல் பண்டிகையை கருத்தில் கொண்டு தர்ணா போராட்டத்தினை நேற்றோடு முடித்து கொள்வது எனவும், அடுத்த கட்டமாக பல்வேறு போராட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கவர்னர் கிரண்பெடி வெளியேற வலியுறுத்தி 22-ந் தேதி கையெழுத்து இயக்கமும், 29-ந் தேதி தொகுதி வாரியாக ஆர்ப்பாட்டமும், அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி உண்ணாவிரதமும், 15-ந் தேதி முதல் 20-ந் தேதிக்குள் ஏதாவது ஒருநாள் மட்டும் முழு அடைப்பு போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.