மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாத இறுதியில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் - தினேஷ் குண்டுராவ் பேட்டி + "||" + Rahul Gandhi's election campaign in Tamil Nadu later this month - Interview with Dinesh Kundurao

தமிழகத்தில் இந்த மாத இறுதியில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் - தினேஷ் குண்டுராவ் பேட்டி

தமிழகத்தில் இந்த மாத இறுதியில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் - தினேஷ் குண்டுராவ் பேட்டி
தமிழகத்தில் இந்த மாத இறுதியில் ராகுல்காந்தி முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் தெரிவித்தார்.
சென்னை, 

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், மாநில பொருளாளர் ரூபி மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் கோபண்ணா வரவேற்றார்.

முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர், மாநில செயலாளர் அகரம் கோபி, செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நெடுஞ்சாலை டெண்டரில் ரூ.3,500 கோடி முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்ட புகாரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள இடைக்கால தடையை நீக்கவும், கிடப்பில் போடப்பட்டு்ள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 3 அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்த விசாரணையை தொடரவும் இந்த மாதத்துக்குள் சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகம் முன்பு தமிழக காங்கிரஸ் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது.

அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்கள் மீது விசாரணை நடத்தாமல் பாதுகாக்கும் பா.ஜ..க. அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்ட முடிவில் தினேஷ் குண்டுராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும் தி.மு.க. தலைமையில் புதிய ஆட்சி அமையும். அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளினால் அ.தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற பொதுமக்கள் முடிவு செய்து விட்டனர்.

இந்த மாத இறுதியில் ராகுல்காந்தி தமிழகத்தில் முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் 3 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இதன்பின்பு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன்பின்பு கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் பேசும்போது, ‘அ.தி.மு.க. கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்பதையே முடிவு செய்ய முடியாதவர்கள் ஆட்சி அதிகாரத்தை எப்படி முடிவு செய்வார்கள் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தி.மு.க. கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் தான் என்பதை கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இதுவே எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி' என்றார்.

இதைத்தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மகளிர் அணி நிர்வாகிகள் பட்டியலை மாநில மகளிர் அணி தலைவி சுதா முன்னிலையில் கே.எஸ்.அழகிரி வெளியிட்டார். இதன்பின்பு தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் நடைபெற்றது.