மாநில செய்திகள்

‘நாங்கள்தான் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறோம்' - மக்கள் வார்டு சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு + "||" + ‘We are safe for you’ - MK Stalin's speech at the People's Ward Council meeting

‘நாங்கள்தான் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறோம்' - மக்கள் வார்டு சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

‘நாங்கள்தான் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறோம்' - மக்கள் வார்டு சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சி தி.மு.க. தான் என்றும், நாங்கள் தான் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறோம் என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்பகுதிகளில் மக்கள் கிராமசபை கூட்டத்தையும், நகராட்சி பகுதிகளில் மக்கள் வார்டு சபை கூட்டங்களையும் நடத்தி வருகிறார். அந்த வகையில், சென்னை ராயபுரத்தில் உள்ள ஆண்டியப்ப கிராமணி தெருவில் நேற்று மக்கள் வார்டு சபை கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

பொள்ளாச்சி வழக்கை விரைவுபடுத்த வேண்டும், வேகப்படுத்த வேண்டும், வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் என்று சொல்லி, நம்முடைய மகளிர் அணியின் சார்பில், பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு, முறையாக காவல்துறையிடம் அனுமதி வாங்கியிருந்தோம்.

அதன்படி அந்த போராட்டத்தை நடத்துவதற்காக, தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி காரில் புறப்பட்டுச் சென்றார். அவர் தங்கி இருந்த இடத்தில் இருந்து, அந்த கூட்டத்திற்கு போகும் போது காவல்துறையினர் தடுத்து விட்டார்கள்.

அதுமட்டுமின்றி, அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல இடங்களிலிருந்து நிறைய மகளிர் வந்திருந்தனர். அவர்களை எல்லாம் வரக்கூடாது என்று காவல்துறையினர் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.

எனவே, இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கான நாள் வந்துவிட்டது. தை பிறக்கப் போகிறது, “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று எல்லோரும் சொல்வது உண்டு. அதேபோல் இந்த ஆண்டு, தை பிறக்க போகிறது; வழியும் பிறக்கப் போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த மக்கள் வார்டு சபை கூட்டத்திற்கு நீங்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு வந்திருக்கிறீர்கள். ஆண்களைவிடப் பெண்கள்தான் அதிகமாக வந்திருக்கிறீர்கள். ஆண்கள் உங்களைச் சுற்றி நின்று கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் தான் உங்களுக்கு பாதுகாப்பாக இருந்து கொண்டிருக்கிறோம். உங்களுக்கு பாதுகாப்பு நாங்கள் தான். அதேபோல எங்களுக்கு பாதுகாப்பு நீங்கள்தான். நீங்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை. நாங்கள் இல்லை என்றால் நீங்கள் இல்லை.

பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கட்சியாக தி.மு.க. இருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி தி.மு.க. தான். தி.மு.க. தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்று நாங்கள் நம்புவதை விட நீங்கள்தான் அதிகமான நம்பிக்கையோடு இருக்கிறீர்கள். இல்லையென்றால் இவ்வளவு பேர் வருவீர்களா?

இந்த ராயபுரத்தில் இருக்கும் எம்.எல்.ஏ. யார் என்று உங்களுக்கு தெரியும். மீன் வளத்துறை அமைச்சராக இருக்கக்கூடியவர், இடையில் சபாநாயகராகவும் இருந்தார். எப்போதும் அவரை “முந்திரிக் கொட்டை, முந்திரிக் கொட்டை” என்று சொல்வார்கள். எதற்கு அவ்வாறு சொல்கிறார்கள் என்றால் வேறு யாராவது பதில் சொல்ல வேண்டும் என்று சொன்னால் அந்த அமைச்சர் பதில் சொல்வதற்கு முன்னால் இவர் முந்திக் கொண்டு சொல்லிவிடுவார். அதனால் அவரை அவ்வாறு சொல்வார்கள். யாரைக்கேட்டாலும் அவசரப்பட்டு முந்திக் கொண்டு வந்து பதில் சொல்லும் இவர், தனது தொகுதிப் பணிகளைச் செய்வதிலும் அந்த அவசரத்தைக் காட்ட வேண்டும் அல்லவா?

மீனவர்கள் கடலுக்கு சென்று, உயிரைப் பணயம் வைத்து, இந்த தொழில்நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்காக வாக்கி டாக்கி வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அதில் பல முறைகேடுகள் நடந்து இருக்கிறது. கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் முறைகேடு செய்திருக்கிறார் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கிறது. இதை தி.மு.க. கண்டுபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

சீன மோட்டார் படகுகளால் சிறு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஜெயக்குமார் என்ன செய்திருக்கிறார் என்ற கேள்வியைத்தான் உங்கள் மூலமாக கேட்க கடமைப்பட்டிருக்கிறேன். பாரம்பரிய மீனவர்களுக்கு படகு வாங்கும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் வந்திருக்கிறது. சொந்த கட்சிக்காரர்களைத் தவிர மற்றவர்களால் படகுகள் வாங்கப்பட முடியவில்லை என்பதனை நான் ஜெயக்குமாருக்கு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

எனவே இந்த ஆட்சியை மாற்றுவதற்கு நீங்கள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.