தேசிய செய்திகள்

16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி: மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை + "||" + Prime Minister Narendra Modi where the PM is discussing #COVID19 situation and vaccination rollout with CMs of all states

16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி: மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி: மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா தடுப்பூசி போடும் பணி குறித்து அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி விட்டது.

தடுப்பு மருந்தோ, தடுப்பூசிகளோ இல்லாததால் கடிவாளம் இல்லா குதிரையாக உலகின் நாலாபக்கமும் தனது கொடூர கரத்தை விரித்த அந்த வைரஸ், அதில் சிக்கிய அனைவரையும் வாரிச்சுருட்டியது. அப்படி கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை பல கோடிகளில் அமைந்து விட்டது.

அதைப்போலவே தன்னிடம் அகப்பட்டவர்களில் பலரின் உயிரை கபளீகரமும் செய்து விட்டது, இந்த கொடூர கொரோனா. அப்படி உலகம் முழுவதும் கொரோனாவால் மாண்ட உயிர்களின் எண்ணிக்கையோ பல லட்சங்களை தாண்டியது.

இந்த பாதிப்பும், மரணமும் இன்னும் நீடிப்பதுதான் சோகத்தின் உச்சக்கட்டம்.

இந்தியாவையும் பெரும் சிக்கலில் தள்ளிய இந்த கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு, பொது முடக்கம் என மக்களின் சுமுக இயக்கத்துக்கு மத்திய-மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதித்தன. சுதந்திரத்துக்கு பின்னர் கண்டிராத மிக நீண்ட பொது முடக்கத்தை நாடு சந்தித்தது.

இந்த கொடூர வைரசை இந்தியாவில் இருந்து முற்றிலும் வேரறுக்கும் வகையில் தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிகளை மத்திய அரசு முடுக்கி விட்டது. இந்தியாவில் கொரோனா கால் பதித்த நாட்களில் இருந்தே தடுப்பூசிகளுக்கான தேடுதலும் தொடங்கி விட்டது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் பணிகள் ஒருபுறம் நடந்து வந்த நிலையில், மறுபுறம் பிற நாடுகள் கண்டுபிடித்த தடுப்பூசிகளையும் இந்தியாவில் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

இந்த பணிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்த மத்திய அரசு, தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களை தொடர்ந்து ஊக்குவித்து வந்தது. குறிப்பாக நாட்டு மக்களை கொரோனாவின் பிடியில் இருந்து விடுவிப்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்த பிரதமர் மோடி, இந்த பணிகளில் தனிக்கவனம் செலுத்தி வந்தார்.

இதன் பலனாக ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன் இணைந்து ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கியது.

இதைப்போல இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை, உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான புனேயை சேர்ந்த சீரம் மருந்து நிறுவனம் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தயாரித்துள்ளது.

இந்த 2 நிறுவனங்களும் மேற்படி தடுப்பூசிகளை இந்தியாவில் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தின. இதில் நல்ல பலன்கள் விளைந்ததை தொடர்ந்து அவற்றை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்ள இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி வி.ஜி.சோமானி கடந்த 3-ந் தேதி அனுமதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து எந்த நேரத்திலும் நாடு முழுவதும் தடுப்பூசி வினியோகம் தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டிருந்தது. இதை உறுதி செய்யும் வகையில், பிரதமர் மோடியும் உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் தொடங்குவதற்கு தயாராக இருக்கிறோம் என அறிவித்து இருந்தார்.

இந்தநிலையில் வருகிற 16-ந் தேதி நாடு முழுவதும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்படுகிறது.  இந்நிலையில் தடுப்பூசி திட்டம் தொடங்குவது தொடர்பாக மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனையும் நடத்தி வருகிறார்.  காணொலி மூலம் பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்றுள்ளார்.

ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் நிலையில் விநியோகம் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனிடையே சீரம் நிறுவனத்திடம் இருந்து 1 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் நிலையில் 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.