மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு டோக்கன் வாங்க திரண்ட கூட்டம் - போலீஸ் தடியடியால் பரபரப்பு + "||" + Crowd gathers to buy tokens for bulls participating in Jallikkat - Stirred by police baton

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு டோக்கன் வாங்க திரண்ட கூட்டம் - போலீஸ் தடியடியால் பரபரப்பு

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு டோக்கன் வாங்க திரண்ட கூட்டம் - போலீஸ் தடியடியால் பரபரப்பு
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு டோக்கன் வாங்க உரிமையாளர்கள் திரண்டனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது.
அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்தில் 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந்தேதியும் ஜல்லிக்கட்டு அரசு வழிகாட்டுதலின் படி நடைபெறுகிறது. இதைதொடர்ந்து கடந்த சில நாட்களாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகள் விழாகோலம் பூண்டுள்ளது. ஜல்லிக்கட்டு விழா பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் மாடுபிடி வீரர்களுக்கான தகுதி தேர்வு நடந்தது. இதன் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டில் களமிறங்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. இதையடுத்து டோக்கன் வழங்கும் பணி நேற்று காலை முதல் மதியம் வரை நடைபெற்றது. இதற்காக அதிகாலையில் இருந்தே 3 இடங்களிலும் அதிக அளவில் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

அலங்காநல்லூரில் 10 திருநங்கைகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் காளைகளுக்கு டோக்கன் வாங்க வந்திருந்தனர். கூட்டம் அதிகமானதால் போலீசாருக்கும், காளை உரிமையாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல பாலமேட்டில் காளை உரிமையாளர்கள் தங்களது காளைகள் பற்றிய விவரங்கள், ஆதார் அட்டை, புகைப்படம் கொண்டு வந்து பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தகுதி உள்ளவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அப்போது பள்ளியின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அலங்காநல்லூர், பாலமேட்டில் சுமார் 1,483 காளைகளுக்கு அதன் உரிமையாளர்களிடம் ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்படும் டோக்கன் வழங்கப்பட்டது.

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பதிவு செய்ய போலீஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் பள்ளியில் அதிகாலையிலேயே திரண்டனர். சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காளைகளுடன் கூட்டம் கூட்டமாக குவிய தொடங்கினர். போலீசார் பலமுறை எச்சரித்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், லேசான தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.

இதனை தொடர்ந்து 840 காளைகளுக்கு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இதுபோல், காளை மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடைபெற்றது. முதற்கட்டமாக 700-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை நேற்று செய்யப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கான கொரோனா பரிசோதனை இன்று நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.