மாநில செய்திகள்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளில் வினாடிக்கு 4,200 கனஅடி தண்ணீர் திறப்பு + "||" + Heavy rains in catchment areas: 4,200 cubic feet per second release of water in Papanasam-Manimuttaru dams

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளில் வினாடிக்கு 4,200 கனஅடி தண்ணீர் திறப்பு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளில் வினாடிக்கு 4,200 கனஅடி தண்ணீர் திறப்பு
நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து நேற்று வினாடிக்கு 4,200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நெல்லை, 

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இந்த நிலையில் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று காலை 7 மணி நிலவரப்படி 142.15 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி நேற்று வினாடிக்கு 2,183 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று 117.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,050 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2,038 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணையின் 3 மதகுகள் மூலம் உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது.

மேலும், கடனா நதி அணையில் இருந்து 448 கனஅடி தண்ணீரும், ராமநதி அணையில் இருந்து 30 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 141.57 அடியாக உள்ளது.

அணைகளில் இருந்து வினாடிக்கு 4,700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், தாமிரபரணி ஆற்றில் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினம் அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அம்பை, விக்கிரமசிங்கபுரம், சேரன்மாதேவி, நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் சுமார் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலை மழைநீர் சூழ்ந்து செல்கிறது. தாமிரபரணி ஆற்றில் உள்ள சிறிய கோவில்களையும் வெள்ளம் மூழ்கடித்து சென்றது. ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் செல்கிறது. ஆற்றில் குளித்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

மேலும் தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

நெல்லையில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடந்தன. சாலைகள் மோசமாக உள்ளதால் நெல்லை டவுன், சந்திப்பு பகுதியில் நேற்று காலை முதல் மதியம் வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

மணிமுத்தாறு-20, பாபநாசம்-18, கடனாநதி-5, சேர்வலாறு-12, அம்பை-15, கன்னடியன் கால்வாய்-23, பாளையங்கோட்டை-20, சேரன்மாதேவி-25, கொடுமுடியாறு-35, நம்பியாறு-22, மூைலக்கரைப்பட்டி-35, ராதாபுரம்-15, நாங்குநேரி-20, ராமநதி-8, களக்காடு-52, சிவகிரி-1, கருப்பாநதி-2, குண்டாறு-2, அடவிநயினார்-3 ஆய்க்குடி-1.