சினிமா செய்திகள்

அரசியலுக்கு அழைத்து வேதனைப்படுத்த வேண்டாம் - ரஜினிகாந்த் உருக்கமான வேண்டுகோள் + "||" + Do not call and torment politics Rajinikanth's heartfelt plea

அரசியலுக்கு அழைத்து வேதனைப்படுத்த வேண்டாம் - ரஜினிகாந்த் உருக்கமான வேண்டுகோள்

அரசியலுக்கு அழைத்து வேதனைப்படுத்த வேண்டாம் - ரஜினிகாந்த் உருக்கமான வேண்டுகோள்
நான் என்னுடைய முடிவை கூறிவிட்டேன் என்றும், அரசியலுக்கு வரவேண்டும் என்று மேலும், மேலும் என்னை வேதனைக்கு உள்ளாக்கவேண்டாம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த' படப்பிடிப்பு முடிந்த பின்னர் முழுமையாக அரசியலில் ஈடுபடுவதற்கு முடிவு செய்திருந்தார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்த படப்பிடிப்பின்போது அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த் கடந்த மாதம் சென்னை திரும்பினார்.

சென்னைக்கு வந்த பிறகு ரஜினிகாந்த் கடந்த 29-ந் தேதி ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அதில், ‘கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டு இருந்தார். உடல்நிலையை காரணம் காட்டி இந்த அறிவிப்பினை ரஜினிகாந்த் வெளியிட்டார். இது அவருடைய ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

ரஜினிகாந்தின் அறிவிப்பை ஏற்க மறுத்து, அவருடைய ரசிகர்களில் ஒரு தரப்பினர் முடிவை மறுபரிசீலனை செய்து அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். இதற்காக சென்னையில் நேற்று முன்தினம் கூட்டம் நடத்த உள்ளதாகவும் அவர்கள் ஒருவருக்கொருவர் தகவல்களை பகிர்ந்தனர். சென்னையில் கூட்டம் நடத்துவற்கு தலைமை ரஜினி மக்கள் மன்றம் ஒப்புதல் எதுவும் அளிக்கவில்லை. எனவே இந்த கூட்டத்தில் யாரும் பங்கேற்கவேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த உத்தரவையும் மீறி, தமிழகம் முழுவதும் இருந்து வந்த ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று முன்தினம் திரண்டு, ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைக்கும் விதமாக 'வா... தலைவா.. வா...' என்ற வேண்டுகோளை விடுத்தனர். ஆனாலும் தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கு, நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பில் இருந்தும், மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்தும், சென்னையில் ஒர் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.

கட்டுப்பாடுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

நான் ஏன் இப்போது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று யாரும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்கவேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.