தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் பறவை காய்ச்சல் உறுதியானது; கண்காணிப்பு பணி தீவிரம் + "||" + Bird flu is confirmed in Uttarakhand; Intensity of monitoring work

உத்தரகாண்டில் பறவை காய்ச்சல் உறுதியானது; கண்காணிப்பு பணி தீவிரம்

உத்தரகாண்டில் பறவை காய்ச்சல் உறுதியானது; கண்காணிப்பு பணி தீவிரம்
வடமாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்டில் பறவை காய்ச்சல் பரவியிருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
டேராடூன்,

கொரோனா தொற்றால் கடந்த ஓராண்டாக பொருளாதார தேக்கம், இயல்பு வாழ்க்கை முடக்கம், உயிரிழப்புகள் போன்ற பெரும் பாதிப்புகளை இந்தியா சந்தித்து வருகிறது. சமீப நாட்களாக இதன் பாதிப்புகள் குறைந்து வருவது ஆறுதல் அளித்துள்ளது.  ஆனால், அதற்குள் மற்றொரு புது விவகாரம் வெடித்து உள்ளது.  புது வருட தொடக்கத்திலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது.

ராஜஸ்தானில் கடந்த 4ந்தேதி பறவை காய்ச்சலால் 425 பறவைகள் இறந்துள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை கூறியது.  அவற்றில் அதிகமாக காக்கைகள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மாநிலம் முழுவதும் 15 மாவட்டங்களில் பறவைகள் இறப்பு பதிவாகி உள்ளது.  மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளிலும் காகங்கள் இறந்துள்ளன.  இமாசல பிரதேசத்தில், காங்ரா மாவட்டத்தின் பாங் டேம் லேக் சரணாலய பகுதி சுற்றுவட்டாரத்தில் 1,800 பறவைகள் இறந்துள்ளன.

கேரளாவில் கோட்டயத்தில் நீண்டூர் என்ற இடத்தில் ஒரு வாத்து பண்ணையில் நோய் பரவி 1,500 வாத்துகள் இறந்துள்ளன. இதேபோல ஆலப்புழா மாவட்டத்தின் குட்டநாடு மண்டலத்தில் உள்ள சில பண்ணைகளிலும் பறவை காய்ச்சல் தாக்கி உள்ளது.  இதற்கு முன்பு, கேரளாவில் கடந்த 2016ம் ஆண்டு பறவை காய்ச்சல் பரவியிருந்தது.

அரியானா, குஜராத் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.  கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து டெல்லியில் கடந்த 9ந்தேதி 200க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளன.

டெல்லியில் பல்வேறு பூங்காக்களிலும் காகங்கள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.  இவற்றில் மயூர் விகார் பகுதியில் உள்ள மத்திய பூங்காவில் 200 காகங்கள் இறந்துள்ளன.

பூங்காவை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பார்வையாளர்களுக்கு தடை விதித்து, பூங்கா மூடப்பட்டது.

கடந்த 10ந்தேதி டெல்லியில் டெல்லி வளர்ச்சி கழகத்தின் 15 பூங்காக்களில் மொத்தம் 91 காகங்கள், 27 வாத்துகள் உயிரிழந்து கிடந்தன.  இதனை தொடர்ந்து அதிகாரிகள் உத்தரவின்படி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.  104 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பறவை காய்ச்சல் பற்றிய பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

டெல்லியின் பசுமை பகுதியான சஞ்சய் லேக் எச்சரிக்கை மண்டலம் என அறிவிக்கப்பட்டது.  கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சஞ்சய் லேக் பகுதிக்கு வந்த அதிகாரிகள் மாதிரிகளை சேகரித்து சென்றனர்.

இந்த சூழலில், கடந்த 3 நாட்களுக்கு முன் மராட்டிய மாநிலம் பர்பானி மாவட்டத்தில் முரும்பா கிராமத்தில் 800 கோழி குஞ்சுகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தன.  அவற்றின் ரத்த மாதிரிகளை மாவட்ட நிர்வாகம் தேசிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தது.  இதன் முடிவுகள் நேற்று வெளிவந்தன.  அதில், பறவை காய்ச்சலால் அவை உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என பர்பானி மாவட்ட ஆட்சியர் தீபக் முக்லிகர் கூறியுள்ளார்.  

இதனால், அந்த கிராமத்தில் ஒரு கி.மீ. சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கோழி பண்ணைகளில் உள்ள பறவைகளை அழிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.  10 கி.மீ. சுற்றளவில் கோழி விற்பனை மற்றும் கொள்முதல் ஆகியவற்றுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.  கிராம மக்கள் அனைவருக்கும் வைரசால் ஏற்பட்ட தொற்று பற்றிய பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது என ஆட்சியர் கூறினார்.

வளர்ப்பு பறவைகளான கோழிகள், வான்கோழிகள், வாத்துகள் உள்ளிட்டவற்றின் கழிவுகள், மூக்கு, வாய், கண் இவற்றின் வழியாக பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் எச்.5.என்.8. வைரஸ் பரவுவதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் பறவை காய்ச்சல் அச்சம் எதிரொலியாக கோழி பண்ணை தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது என வர்த்தகர்கள் தெரிவித்து உள்ளனர்.  டெல்லி மற்றும் மராட்டிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவல் நேற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், உத்தரகாண்டில் பறவை காய்ச்சல் இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  கொத்வார் மற்றும் டேராடூன் நகரில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.  அவற்றின் ஆய்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

அதில் உத்தரகாண்டில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானது.  இதனை தொடர்ந்து பரவலை கட்டுப்படுத்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.  இதேபோன்று இடம் பெயர்ந்து வரும் பறவைகள் மற்றும் பண்ணைகளில் உள்ள கோழிகள் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து வரும்படியும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியம், மத்திய பிரதேசத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
மராட்டியம் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து மொத்தம் ரூ.4 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
2. இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது
இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் 83 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.