மாநில செய்திகள்

குடிநீர் ஆதாரத்தை அதிகரிப்பதற்காக பெருங்குடி, நெசப்பாக்கம் ஏரிகளில் தலா 10 மில்லியன் லிட்டர் நீர் விடும் திட்டம் - குடிநீர் வாரியம் முடிவு + "||" + Project to release 10 million liters of water each in Perungudi and Nesapakkam lakes to increase the source of drinking water - Drinking Water Board decision

குடிநீர் ஆதாரத்தை அதிகரிப்பதற்காக பெருங்குடி, நெசப்பாக்கம் ஏரிகளில் தலா 10 மில்லியன் லிட்டர் நீர் விடும் திட்டம் - குடிநீர் வாரியம் முடிவு

குடிநீர் ஆதாரத்தை அதிகரிப்பதற்காக பெருங்குடி, நெசப்பாக்கம் ஏரிகளில் தலா 10 மில்லியன் லிட்டர் நீர் விடும் திட்டம் - குடிநீர் வாரியம் முடிவு
குடிநீர் ஆதாரத்தை அதிகரிப்பதற்காக பெருங்குடி, நெசப்பாக்கம் ஏரிகளில் தினசரி தலா 10 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீர் விடப்படும் திட்டத்தை பிப்ரவரி மாதம் செயல்படுத்த குடிநீர் வாரியம் திட்டமிட்டு உள்ளது.
சென்னை,

சென்னையில் குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்துவதற்கும், நிலத்தடி நீரை உயர்த்துவதற்காகவும் சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குடிநீர் தரத்திற்கு கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து மாநகரில் உள்ள ஏரிகளில் விட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய, குடிநீர் வாரியம் புதிய திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக பெருங்குடி மற்றும் நெசப்பாக்கத்தில் 3-ம் தர சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, கழிவுநீரை சுத்திகரித்து மறு சுழற்சி செய்யப்பட்ட குடிநீர் தரத்திலான நீர், பெருங்குடி மற்றும் நெசப்பாக்கம் ஏரிகளில் விட பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு, தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் பணிகள் தொடங்கப்பட்டது. சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்ப வழிகாட்டுதலின் படி நடந்து வந்த பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளன. விரைவில் பெருங்குடி, நெசப்பாக்கம் ஏரியில் பிப்ரவரி மாதம் முதல் நீர் விடப்படுகிறது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

கோயம்பேடு, கொடுங்கையூர், நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய 4 இடங்களில் 72.7 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு தேவையான கழிவு நீர் மாநகரில் உள்ள 8 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழிவுநீர் இணைப்புகள் வழியாக பெறப்பட்டு, தினசரி 55 கோடி லிட்டர் கழிவுநீர் முதல் மற்றும் 2-ம் நிலையில் சுத்திகரிக்கப்படுகிறது. கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரில் 3-ம்நிலை சுத்திகரிப்பு நிலையம் வழியாக, கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, தினசரி 9 கோடி லிட்டர் குடிநீர் புறநகர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.

பிப்ரவரி மாதத்தில் இருந்து தினசரி தலா 10 மில்லியன் லிட்டர் மறுசுழற்சி செய்யப்பட்ட குடிநீர் நெசப்பாக்கம், பெருங்குடி ஏரிகளில் விடும் திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

தனியார் சுத்திகரிப்பு நிலையங்களில், சுத்திகரிக்கப்பட்ட நீர் முழுவதும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வரை கடலில் விடப்பட்டது. நாட்டிலேயே முதன் முறையாக 2-ம்நிலை சுத்திகரிக்கப்பு செய்யப்பட்ட நீர், தொழிற்சாலைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பெருங்குடி, நெசப்பாக்கம் நிலையங்களில் சுத்திகரிக்கப்படும் நீர் முழுவதும் கடலிலேயே விடப்பட்டு வந்தது. இதனை மாற்றி அமைக்கவே 3-ம்நிலை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது-

இரண்டு நிலைகளில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர், 3-வது முறையாக சுத்திகரிக்கப்பட்டு, நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெருங்குடி ஏரிக்கு குழாய்கள் மூலம் அனுப்பப்படுகிறது. அதேபோல் 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நெசப்பாக்கம் ஏரிக்கும் குழாய்கள் அமைக்கப்பட்டு நீர் விடப்பட உள்ளது. ஏரிகளில் ஏற்கனவே உள்ள நீருடன் இந்த சுத்திகரிக்கப்பட்ட நீர் கலக்கப்பட்டு விடும். இந்த நீர், இயற்கையாகவே, நன்னீராகிவிடும்.

இதனை தொடர்ந்து 3-ம் நிலையில், குடிநீர் தரத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை போரூர், ரெட்டேரி, பெரும்பாக்கம், அயனம்பாக்கம் உள்ளிட்ட ஏழு ஏரிகளில் விடப்பட உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், சுத்திகரிக்கப்பட்ட நீர், மீண்டும் மறு சுத்திகரிப்பு செய்து, குடிநீராக மாற்றி, வினியோகம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தினசரி 26 கோடி லிட்டர் நீர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய முடியும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்திற்கு, இங்கிலாந்து தூதரகம் தொழில்நுட்ப உதவியை வழங்குகிறது. உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வரும் போது, மாநகர குடிநீர் தேவையை 25 சதவீதத்திற்கு மேல், பூர்த்தி செய்ய முடியும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பெருங்குடியில் ரூ.74.69 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தின் 2-வது தரவு மையம்: காணொலி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை பெருங்குடியில் ரூ.74.69 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தமிழகத்தின் 2-வது அதிநவீன மாநில தரவு மையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.