ராகுல்காந்தி நாளை தமிழகம் வருகை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்க்கிறார் + "||" + Rahul Gandhi to visit Tamil Nadu tomorrow: Avanyapuram sees Jallikaddai
ராகுல்காந்தி நாளை தமிழகம் வருகை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்க்கிறார்
பொங்கல் தினமான நாளை மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க ராகுல்காந்தி வருகிறார் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று, ‘ராகுலின் தமிழ் வணக்கம’ என்ற பெயரில், தமிழர்களின் பாரம்பரியம் மிக்க, பெருமை மிக்க விவசாயிகளின் சின்னமான காளையை அடக்குகிற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பார்வையிடுகிறார். பொங்கல் தினத்தன்று (நாளை) காலை 11 மணியளவில் மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4 மணி நேரம் அங்கேயே செலவிடுகிறார்.
இந்த வருகையின் மூலமாக இந்தியா முழுவதும் போராடி வரும் விவசாயிகளுக்கு தார்மீக ஆதரவை தர இருக்கிறார். அது மட்டும் அல்ல, தமிழகத்தில் நடைபெறும் ஒரு மோசமான தரமற்ற, மத்திய அரசாங்கத்திற்கு தலைவணங்கி இருக்கின்ற இந்த ஆட்சியை தூக்கி எறிவதற்காக இந்த ஆட்சியின் தீமைகளை, தமிழகத்தின் வரி உரிமைகளை பறிகொடுக்கும் இந்த ஆட்சியை அப்புறப்படுத்துவதற்காக ‘ராகுலின் தமிழ் வணக்கம்' கொடி கட்டி பறக்கும்.
ராகுல் காந்தியின் இந்த வருகையின் போது கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு இல்லை. இதைத் தொடர்ந்து தமிழகத்திற்கு அவர் வருகை தர இருக்கும் நிகழ்ச்சிகளில் தோழமை கட்சி தலைவர்களோடு அவர் பங்கு கொள்வார். தமிழகத்தை அவர் மிகவும் நேசிக்கிறார். பஞ்சாபில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, தமிழக மக்களை நான் மிகவும் நேசிக்கிறேன். என் மனம் கவர்ந்த மக்கள் அவர்கள் என்று கூறியிருக்கிறார்.
பிரியங்கா காந்தியை அழைப்போம்
காரணம், தமிழக மக்களின், சுயமரியாதை, தமிழ் உணர்வு, தேசப்பற்று ராகுலை கவர்ந்து இருக்கிறது. அது மட்டும் அல்ல நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை தமிழகம் கொடுத்து இருக்கிறது. எனவே, தமிழக மக்கள் அரசியல் ரீதியாக பெரிய அளவில் சிந்திக்கிறார்கள் என்று அவர் கருதுகிறார். இவைகளை மையமாக வைத்து தமிழகத்தில் மிகப்பெரிய சுற்றுப்பயணம் செய்ய அவர் திட்டமிட்டு உள்ளார்.
தேர்தல் பிரசாரத்துக்கு பிரியங்கா காந்தியையும் நாங்கள் அழைப்போம்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுடன் 20 சதவீத இடஒதுக்கீடு குறித்து பேச தேர்தல் நேரத்தில் ஏன் அமைச்சர்கள் செல்ல வேண்டும்? அவர்கள் கட்சிகளுக்குள் எவ்வளவு இடஒதுக்கீடு செய்து கொள்வது என்பது குறித்து பேச சென்றிருப்பார்களே தவிர வேறு எதுவும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
பத்திரிகையாளர் சந்திப்பை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தியின் பிறந்தநாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
ஈரோட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பிரசாரத்துக்கு வரும் ராகுல்காந்தி இங்குள்ள காந்தி, காமராஜர், பெரியார் சிலைகள் உள்பட 8 தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய இருப்பதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.