தேசிய செய்திகள்

15-ந் தேதி பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்: சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழு முன் ஆஜராக மாட்டோம் - விவசாய அமைப்புகள் அறிவிப்பு + "||" + We will take part in the talks on the 15th We will not appear before the panel set up by the Supreme Court Notice of Agricultural Organizations

15-ந் தேதி பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்: சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழு முன் ஆஜராக மாட்டோம் - விவசாய அமைப்புகள் அறிவிப்பு

15-ந் தேதி பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்: சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழு முன் ஆஜராக மாட்டோம் - விவசாய அமைப்புகள் அறிவிப்பு
சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழு முன் ஆஜராக மாட்டோம், அதே நேரத்தில் 15-ந் தேதி மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.
புதுடெல்லி,

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதே நேரத்தில் இந்த சட்டங்களை ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்கு ஒரு குழுவையும் சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது.

இது குறித்து டெல்லியில் சிங்கு எல்லையில் விவசாய அமைப்புகளின் தலைவர்கள், பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ள குழு உறுப்பினர்கள், அரசுக்கு ஆதரவானவர்கள் என்பதால், அவர்கள் முன்னிலையில் ஆஜராக மாட்டோம் என அறிவித்தனர். இதுபற்றிய விவசாய அமைப்புகளின் தலைவர்கள் கருத்துகள் வருமாறு:-

பல்பீர்சிங் ராஜேவால்:-

சுப்ரீம் கோர்ட்டு நியமித்த குழுவின் உறுப்பினர்கள், வேளாண் சட்டங்கள் எவ்வாறு விவசாயிகளுக்கு ஆதரவானவை என எழுதி வருவதால், அவர்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல. நாங்கள் எங்கள் போராட்டத்தை தொடர்வோம். நாங்கள் கொள்கை அடிப்படையில் குழுவுக்கு எதிரானவர்கள். போராட்டத்தில் இருந்து கவனத்தை திருப்புவதற்கு அரசு மேற்கொள்ளும் வழி இது.

தர்ஷண் சிங்:-

நாங்கள் எந்த குழுவின் முன்பும் ஆஜராக மாட்டோம். நாடாளுமன்றம் விவாதித்து பிரச்சினையை தீர்க்க வேண்டும். நாங்கள் எந்த வெளிப்புற குழுவையும் விரும்பவில்லை.

இவ்வாறு கருத்து தெரிவித்த விவசாய அமைப்புகளின் தலைவர்கள், மத்திய அரசு 15-ந் தேதி நடத்த உள்ள பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்த உடன் பல்வேறு விவசாய அமைப்புகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். அது வருமாறு:-

அபிமன்யு கோஹர் (தவைவர், சம்யுக்த் கிசான் மோர்ச்சா):-

வேளாண் சட்டங்களை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்த சட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இது எங்கள் முக்கிய கோரிக்கை ஆகும்.

மற்றொரு விவசாய அமைப்பின் தலைவர் ஹரிந்தர் லோக்வால்:-

சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரையில் போராட்டம் தொடரும்.

லக்பீர் சிங் (துணைத்தலைவர், அனைத்திந்திய கிசான் சபா-பஞ்சாப்):-

குழு அமைக்கும் யோசனையில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. ஒரு குழுவை அமைக்கலாம் என மத்திய அரசு கூறியபோதே, ஆரம்பத்தில் இருந்தே இதை நாங்கள் கூறி வருகிறோம். ஆனால் இந்த முறை கூறி இருப்பது சுப்ரீம் கோர்ட்டு. இந்த குழுவின் செயல்பாட்டை பார்ப்போம்.

மஞ்சித் சிங் (துணைத்தலைவர், பாரதீய கிசான் சங்கம்-பஞ்சாப்):

சுப்ரீம் கோர்ட்டு முடிவை வரவேற்கிறோம். ஆனால் இது தடை உத்தரவுதான். 3 சட்டங்களும் ரத்து செய்யப்படவில்லை. எனவே அந்த சட்டங்களை ரத்து செய்யும் வரையில் இங்கிருந்து நகர மாட்டோம். போராட்டம் தொடரும். குழு அமைக்கும் யோசனைக்கு நாங்கள் எதிரானவர்கள். ஆனால் அதை அரசு அமைப்பதற்கும், சுப்ரீம் கோர்ட்டு அமைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்கள்.