போகி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பழைய பொருட்களை ரோட்டில் போட்டு எரித்தனர்.
சென்னை,
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் கொண்டாடப்படுவது போகி பண்டிகை ஆகும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கேற்ப போகி பண்டிகை கொண்டாடப்பட்டது.
போகி பண்டிகையையொட்டி வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவார்கள்.
இன்று அதிகாலையில் போகி பண்டிகையையொட்டி வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எடுத்து எரிக்க தொடங்கினர். இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அதிகாலையில் இருந்தே புகை மூட்டம் சூழத்தொடங்கியது.
தற்போது பனி மூட்டமும் காலையில் இருப்பதால், புகை மூட்டமும் அதனுடன் சேர்ந்து ‘கும்’ இருட்டுடன் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகள் காட்சி அளித்தன.
இதனால் காலையில் அலுவலக பணி மற்றும் இதர பணிகளுக்காக வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் விளக்குகளை எரிய விட்டபடியே சென்றனர். சிலருக்கு புகை கண் எரிச்சல் மற்றும் இருமலை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
விடிந்ததும் அனைத்து வீதிகளிலும் பொதுமக்கள் எரித்த குப்பைகள் குவிந்து கிடந்தன. அதை துப்புரவு ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.