மாநில செய்திகள்

தலைமைச் செயலாளர் கே.சண்முகம் இந்த மாத இறுதியில் ஓய்வு - 47-வது தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா? + "||" + General Secretary K. Shanmugam to retire at the end of this month - 47th General Secretary Hansraj Verma?

தலைமைச் செயலாளர் கே.சண்முகம் இந்த மாத இறுதியில் ஓய்வு - 47-வது தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா?

தலைமைச் செயலாளர் கே.சண்முகம் இந்த மாத இறுதியில் ஓய்வு - 47-வது தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா?
தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் இந்த மாதம் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அவருக்கு அடுத்த தலைமைச் செயலாளராக ஹன்ஸ்ராஜ் வர்மா நியமிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை, 

தமிழகத்தின் 46-வது தலைமைச் செயலாளராக கே.சண்முகம் 2019-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி பதவி ஏற்றார். அவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலையில் 60 வயதை கடந்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பணி ஓய்வு வயது அதுவாகும்.

அதன்படி கடந்த ஜூலை 31-ந் தேதியுடன் அவர் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அவருக்கு அக்டோபர் 31-ந் தேதி வரை 3 மாதங்களுக்கு பணிநீட்டிப்பு அளிக்கப்பட்டது.

அக்டோபர் 31-ந் தேதியுடன் கே.சண்முகத்திற்கு பணி நிறைவடையும் நிலையில், அவருக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. அதன் அடிப்படையில் அவருக்கு கடந்த நவம்பர் 1-ந் தேதியில் இருந்து இந்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி வரை பதவி காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

கே.சண்முகம், 2 முறை பதவி நீட்டிப்பையும் சேர்த்து ஒரு ஆண்டு 7 மாதங்கள் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியில் இருந்துள்ளார்.

அடுத்த தலைமைச் செயலாளரை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதில், ஹன்ஸ்ராஜ் வர்மவின் பெயர் அதிகம் அடிபடுவதாக தெரிகிறது.

ஹன்ஸ்ராஜ் வர்மா தற்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அவர் தமிழக அரசு பணியில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 1986-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந் தேதி சேர்ந்தார்.