மாநில செய்திகள்

ஐதராபாத்தில் இருந்து மேலும் 20 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்தன + "||" + Another 20,000 corona vaccines came to Tamil Nadu from Hyderabad

ஐதராபாத்தில் இருந்து மேலும் 20 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்தன

ஐதராபாத்தில் இருந்து மேலும் 20 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்தன
தெலுங்கானாவில் இருந்து மேலும் 20 ஆயிரம் கொரோனா தடுப்பு மருந்துகள் நேற்று தமிழகம் வந்தடைந்தன.
சென்னை,

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரில், தடுப்புமருந்து தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அந்த வகையில் புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்புமருந்தும், தெலுங்கானாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தில் ‘கோவேக்சின்’ தடுப்புமருந்தும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த 2 மருந்துகளையும் நாடு முழுவதும் பிரித்து வழங்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று முன்தினம் காலை புனேயில் இருந்து தமிழகத்துக்கு 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 ‘டோஸ்’ கோவிஷீல்டு தடுப்புமருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன. சென்னையில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அந்த தடுப்புமருந்தை, தமிழகத்தில் உள்ள 45 சுகாதார மாவட்டங்களுக்கு அங்குள்ள சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 20 ஆயிரம் கோவேக்சின் தடுப்புமருந்துகள் நேற்று ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன. அந்த தடுப்புமருந்துகள் பிரத்யேக வாகனம் மூலம் உடனடியாக விமான நிலையத்தில் இருந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணியக இயக்குனர் அலுவலக (டி.எம்.எஸ்) வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டன.

கோவேக்சின் தடுப்புமருந்துகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று காலை நேரில் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின்போது பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தமிழகத்துக்கு நேற்று வந்த 20 ஆயிரம் கோவேக்சின் தடுப்புமருந்துகளுடன் இதுவரை 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 ‘டோஸ்’ தடுப்புமருந்துகளை மத்திய அரசு வழங்கி உள்ளது. இந்த தடுப்புமருந்துகள் அனைத்து வரும் 16-ந் தேதி சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.