மாநில செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு - இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம் + "||" + Body of 4 Rameswaram fishermen rescued - Protest against Sri Lankan Navy

ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு - இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம்

ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு - இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம்
இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் கடலில் மூழ்கி பலியான ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டதையடுத்து ராமேசுவரத்தில் மீனவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
ராமேசுவரம்,

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய-இலங்கை அணிகள் மோதின. அதில் இந்திய அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. இது இலங்கை கடற்படையினர் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியதாகவும், அதன் காரணமாக ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகு மற்றும் அதில் இருந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் மூழ்கடித்து கொன்றதும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் நடந்து சரியாக 10 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு கொடூர சம்பவத்தை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் அரங்கேற்றி இருப்பதாக ராமேசுவரம் மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து ஆரோக்கியதாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மெசியான் (வயது 28), உச்சிப்புளி அருகே வட்டவளம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (52), மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்த சாம்சன் (25), திருப்புல்லாணியைச் சேர்ந்த செந்தில்குமார் (32) ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கடந்த 18-ந் தேதி இரவில் நடுக்கடலில் மீன் பிடித்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படை கப்பல் அந்த மீனவர்களின் விசைப்படகின் மீது வேகமாக மோதியதாகவும், அதில் படகு மூழ்கடிக்கப்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. 

மேலும் அந்த படகில் இருந்த 4 மீனவர்களும் வாக்கி-டாக்கி மூலம் அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் தங்களை காப்பாற்றுமாறு உதவி கேட்டதாகவும், ஆனால் இலங்கை கடற்படை கப்பலை அந்த பகுதியில் நிறுத்தி இருந்ததால் யாரும் சென்று உதவ முடியாத நிலை ஏற்பட்டதாகவும், எனவே அந்த 4 மீனவர்களும் கடலில் மூழ்கிவிட்டதாகவும் திடுக்கிடும் தகவல்களும் அம்பலமானது.

இதற்கிடையே கடலில் மூழ்கிய 4 பேரையும் இந்திய கடலோர காவல் படையினர் 2 கப்பல்கள் மூலமாகவும், மீனவர்கள் படகுகளில் சென்றும் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கடலில் மிதந்து கொண்டிருந்த 2 உடல்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த 2 உடல்களும் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி மூழ்கடிக்கப்பட்ட விசைப்படகில் இருந்தவர்கள் என்பதும், அதில் ஒருவர் ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியான் என்பதும், மற்றொருவர் திருப்புல்லாணியை சேர்ந்த செந்தில்குமார் என்பதும் தெரியவந்தது. மற்ற 2 பேர் கதி என்ன? என்பது தெரியாமல் இருந்தது.

இந்தநிலையில் நேற்று சாம்சன், நாகராஜ் ஆகியோரது உடல்களும் இலங்கை கடல் பகுதியில் மிதந்தன. அந்த 2 உடல்களையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றி யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கப்பலை மோதவிட்டு படகை மூழ்கடித்ததுடன், 4 மீனவர்களை கடலில் மூழ்க வைத்து இலங்கை கடற்படையினரே கொலை செய்துள்ளதாக ராமேசுவரம் மீனவர்கள் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளனர். இந்த சம்பவம் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படு்த்தி உள்ளது.

4 மீனவர்கள் சாவுக்கு காரணமான இலங்கை கடற்படை மீது கொலை வழக்குப்பதிவு செய்து நீதி விசாரணை நடத்த வேண்டும், 4 பேரின் உடல்களையும் உடனடியாக இந்தியா கொண்டு வந்து இந்திய டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும், பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ராமேசுவரம் தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் எதிரில் அனைத்து மீனவர்கள் சார்பாக கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படகு மூழ்கடிக்கப்பட்டதில் பலியான மீனவர் மெசியாவின் தாய் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடைபெற்ற இடத்தின் முன்பு கதறி அழுதபடி நின்றனர். 4 மீனவர்களின் இறப்புக்கு நீதி கேட்டு நாளை (சனிக்கிழமை) கச்சத்தீவுக்கு பயணம் செய்யப்போவதாகவும், நாளை மறுநாள் சாலை மறியல் செய்ய போவதாகவும் மீனவர்கள் அறிவித்து உள்ளனர். இந்த நிலையில், 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் அடித்து கொன்று விட்டதாக கூறி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.