மாநில செய்திகள்

குடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு + "||" + One lakh police security across Tamil Nadu on the occasion of Republic Day

குடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு

குடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு
குடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை,

குடியரசு தின விழாவையொட்டி சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு நாளை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அரசு செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் உஷார் நிலையில் இருக்க டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

சென்னையில் குடியரசு தின விழா நடைபெறும் கடற்கரை காந்தி சிலை பகுதி பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் மோப்பநாய் உதவியுடன் அடிக்கடி அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முக்கிய ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில், டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மண்டலத்தில் ரெயில்வே சூப்பிரண்டு பி.ராஜன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் மோப்ப நாய், ‘மெட்டல் டிடெக்டர்’ உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்டிரல் ரெயில் நிலையம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். ரெயில் நிலையங்களில் சந்தேகத்துக்கிடமான நபர்கள் சுற்றித்திரிவதை கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதேபோல் எழும்பூர் ரெயில் நிலையத்திலும், ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து, சந்தேகத்துக்கிடமான நபர்களை கண்காணித்து வருகின்றனர்.

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தென்காசியில் குடியரசு தினவிழா- கலெக்டர் சமீரன் தேசிய கொடியேற்றினார்
தென்காசியில் நடந்த குடியரசு தினவிழாவில், கலெக்டர் சமீரன் தேசிய கொடியேற்றினார்.
2. குடியரசு தின விழா அணிவகுப்பில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு
குடியரசு தின விழா அணிவகுப்பை பார்வையிட 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. குடியரசு தின விழா ஒத்திகை: மெரினா காமராஜர் சாலையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு
குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்காக மெரினா காமராஜர் சாலையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.