மாநில செய்திகள்

காவிரி-வைகை-குண்டாறு இடையே கால்வாய்: ரூ.14,400 கோடியில் நதிகள் இணைப்பு திட்டம்; எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார் + "||" + The people of the Southern District will benefit greatly; Canal between Cauvery-Vaigai-Gundaru: Rs 14,400 crore river connection project; Edappadi Palanisamy laid the foundation stone

காவிரி-வைகை-குண்டாறு இடையே கால்வாய்: ரூ.14,400 கோடியில் நதிகள் இணைப்பு திட்டம்; எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

காவிரி-வைகை-குண்டாறு இடையே கால்வாய்: ரூ.14,400 கோடியில் நதிகள் இணைப்பு திட்டம்; எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
காவிரி- வைகை - குண்டாறு இடையே ரூ.14,400 கோடியில் நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
காவிரி, தெற்கு வெள்ளாறு, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம், தென் மாவட்டங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.

ரூ.14 ஆயிரத்து 400 கோடி திட்டம்
ரூ.14 ஆயிரத்து 400 கோடி மதிப்பில், நிறைவேற்றப்படுகிற இந்த திட்டத்தினால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறபோது, வருகிற உபரி நீரை வறட்சியின் பிடியில் சிக்கி வருகிற தென் மாவட்டங்களுக்கு திருப்பி விட வழி பிறக்கும்.

இந்த திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட இருக்கிறது.
முதல் கட்டத்தில் கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களின் 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலப்பரப்பும், இரண்டாவது கட்டத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 23 ஆயிரத்து 245 ஏக்கர் நிலப்பரப்பும், மூன்றாவது கட்டத்தில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஏறத்தாழ 44 ஆயிரத்து 547 ஏக்கர் நிலப்பரப்பும் நீர்ப்பாசன வசதியைப் பெறும்.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறபோது, கடலில் வினாடிக்கு சுமார் 6,300 கன அடி நீர் கடலில் கலக்கும். அது, இனி மேற்சொன்ன மாவட்டங்களின் நீர்ப்பாசன தேவைக்கும், குடிநீர் வசதிக்கும் பயன்படும் என்பது சிறப்பு.

இணைப்பு விவரம்
முதல் கட்ட திட்டத்துக்காக 118.45 கி.மீ. நீளத்துக்கு கட்டளை கால்வாயில் இருந்து கால்வாய் வெட்டப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டம், தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படுகிறது.

இரண்டாம் கட்ட திட்டத்துக்காக தெற்கு வெள்ளாற்றில் இருந்து 109 கி.மீ. நீளத்துக்கு கால்வாய் உருவாக்கி, வைகையுடன் இணைக்கப்படும்.

மூன்றாம் கட்ட திட்டத்துக்காக 34 கி.மீ. நீளத்துக்கு கால்வாய் வெட்டி வைகை முதல் குண்டாறு வரை இணைக்கப்படுகிறது.

அடிக்கல் நாட்டு விழா
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூரில், ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல் கட்ட பணிகள் மற்றும் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உப வடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகள் புனரமைக்கும் பணிகள் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

பூமி பூஜையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செங்கலை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டினர். தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் ஒரு செங்கலை எடுத்து கொடுத்தனர்.அதன்பின் கால்வாய் வெட்டுவதற்கான பணிகளை கொடியசைத்து எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 100 பொக்லைன்களைக் கொண்டு ஒரே நேரத்தில் மண் தோண்டப்பட்டது. இதனை அங்கு பார்க்கும்போது பிரமாண்டமாக இருந்தது.

விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை
இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது கூறியதாவது:-

இன்றைக்கு என் வாழ்நாளில் ஒரு பொன்னான நாள். ஒவ்வொருவருக்கும் வாழ்நாளிலே ஒரு மகிழ்ச்சியான நாள் இருக்கும். அந்த மகிழ்ச்சியான நாள் இந்த பொன்னாள், இந்நாள் என்று மகிழ்ச்சியோடு இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் ஒரு விவசாய குடும்பத்திலே பிறந்து வளர்ந்தவன். துணை முதல்-அமைச்சரும் விவசாய குடும்பத்திலே பிறந்து வளர்ந்தவா். உங்களுடைய அமைச்சரும் விவசாய குடும்பத்திலே பிறந்து வளர்ந்தவர். அதேபோல, இந்த திட்டத்தினால் பயன்பெறுகின்ற மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள். ஆகவே, விவசாய குடும்பத்திலே பிறந்த நாங்கள், முதல்-அமைச்சராக, துணை முதல்-அமைச்சராக, அமைச்சர்களாக இருக்கிறோம். அதனால் விவசாய பெருமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுகிறபோது 
உண்மையிலே மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

‘யாரும் நிறைவேற்றியது இல்லை’
பொதுப்பணித்துறையின் மூலமாக காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுகிறோம். ஒரே காலக்கட்டத்தில் ரூ.14 ஆயிரத்து 400 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. எனக்கு தெரிந்த வரை தமிழகத்தில் ரூ.14 ஆயிரத்து 400 கோடியில் பொதுப்பணித் துறை திட்டத்தை யாரும் நிறைவேற்றிய நிலை இல்லை. இப்போது தான் முதல் முறையாக நிறைவேற்றுகிறோம்.

இவ்வளவு பெரிய திட்டத்தின் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுகிறார்கள்.

100 ஆண்டு கால கனவு திட்டம்
காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேறுமா?, நிறைவேறாதா? என்று பலபேர் சந்தேகத்தில் இருந்தார்கள். 100 ஆண்டு கால கனவு திட்டத்தை இன்றையதினம் அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி இருக்கிறது. காவிரியை ஒட்டி பெரிய, பெரிய நகரங்கள் இருக்கின்றன. அந்த நகரத்தில் இருந்து வெளியேறுகிற அசுத்த நீர் காவிரியில் கலக்கின்றது. அதை தடுத்து நிறுத்தி அங்கே சுத்திகரித்து நதியில் விடவேண்டும். அதற்காக “நடந்தாய் வாழி காவிரி” என்ற அற்புதமான திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம். பிரதமரும் அதனை ஜனாதிபதி உரையில் இடம்பெறச் செய்திருக்கின்றார்.

அதற்கு மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால், நம்முடைய கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இது ஒன்றே சாட்சி
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், நீங்கள் வைத்த எந்த கோரிக்கையையாவது மத்தியில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா என்று கேட்கிறார். மத்தியில் இருந்து என்ன திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு இது ஒன்றே சாட்சி. நாங்கள் வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றிருக்கிறது.

நடந்தாய் வாழி காவிரி என்ற அற்புதமான திட்டத்தை அ.தி.மு.க. அரசு செயல்படுத்துகிறபோது இந்த நதி சுத்தம் செய்யப்படுகிறது. தூய்மையான நீர் கடைக்கோடியில் இருக்கிற மக்களுக்கு கிடைக்கும். ஆகவே, இந்த திட்டத்தையும் நாங்கள்தான் நிறைவேற்றித் தருவோம்.

அவதூறு பிரசாரம்
அதற்கும் மேலாக, கோதாவரி-காவிரி திட்டத்தையும் அ.தி.மு.க. அரசுதான் நிறைவேற்றித் தரும். ஆனால், எந்த திட்டமும் அ.தி.மு.க. அரசில் நடைபெறவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிடுகிறார். இந்த திட்டங்கள் எல்லாம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, இவையெல்லாம் சாட்சிகள். யாரும் இதனை மறைக்க முடியாது.தமிழ்நாடு முழுவதும் சென்று அ.தி.மு.க. அரசை குறை கூறுவதை வாடிக்கையாக கொண்டு, மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரசாரத்தை பரப்பி வருகிறார். எங்கள் ஆட்சி காலத்தில் செய்த திட்டங்களை நான் உங்களுக்கு கூறுகிறேன். ஆனால், தி.மு.க. ஆட்சி காலத்தில் செய்த திட்டங்களை எங்காவது மு.க. ஸ்டாலின் குறிப்பிடுகிறாரா?.

மக்களின் வாழ்த்துகள்
அ.தி.மு.க. அரசைப் பொறுத்தவரை நாங்கள் சொல்வதை எல்லாம் செயல்படுத்தியுள்ளோம், செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை தொடங்கியதற்குகூட அவர் அவதூறு பேசி வருகிறார்.

மக்களின் 100 ஆண்டுகால கனவு திட்டமான காவிரி-குண்டாறு திட்டத்தை எங்கள் அரசு நிறைவேற்றி கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்த்துகளைப் பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக, மக்களின் வரவேற்புக்கு மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் டிராக்டரில் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்படுவதாகவும், மே மாதம் 31-ந்தேதி வரை ஓய்வு பெறும் வயது பொருந்தும் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
2. அத்திப்பட்டில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் திட்டத்தின் கொதிகலன் எரியூட்டும் நிகழ்வினை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
அத்திப்பட்டில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் திட்டத்தின் கொதிகலன் எரியூட்டும் நிகழ்வினை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
3. காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு எதிர்ப்பு: தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம்; வாட்டாள் நாகராஜ் உள்பட 50 பேர் கைது
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக-கர்நாடகா எல்லையில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாட்டாள் நாகராஜ் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. அலட்சியம் காட்டிய முதல்வர் தேர்தலுக்காக வழக்குகளை வாபஸ் என அறிவித்திருக்கிறார் - ஸ்டாலின்
திமுக கோரிக்கையை காலந்தாழ்த்தியேனும் நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்தில் அதிமுக அரசு உள்ளது என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
5. தி.மு.க.வின் தில்லுமுல்லுகளை, அ.தி.மு.க. இளைஞர் பட்டாளம் முறியடிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
வீடு, வீடாக அரசின் சாதனைகளை கூறி அ.தி.மு.க. இளைஞர் பட்டாளம் தி.மு.க.வின் தில்லுமுல்லுகளை முறியடிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.