காவிரி உபரிநீரை தமிழகம் பயன்படுத்தி கொள்வதற்கு கர்நாடக அரசு அனுமதிக்காது : எடியூரப்பா + "||" + We Will Not Allow Tamil Nadu To Use Surplus Cauvery Water: BS Yediyurappa
காவிரி உபரிநீரை தமிழகம் பயன்படுத்தி கொள்வதற்கு கர்நாடக அரசு அனுமதிக்காது : எடியூரப்பா
காவிரி உபரி நீரை தமிழகம் பயன்படுத்திக்கொள்ள கர்நாடக அரசு அனுமதி அளிக்காது என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
ரூ.14,400 கோடி செலவில் காவிரி, வைகை, குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் விதமாக நதிகள் இணைப்பு திட்டத்தை நேற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
காவிரியில் உபரியாக வெளியேறும் நீரைக் கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாகக் குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் நூறாண்டு கால கனவு நிறைவேற்றப்படும்.
முதல்கட்டத் திட்டம் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 118.45 கி.மீ. நீளத்திற்குக் கட்டளைக் கால்வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்பட உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள காவிரி, வைகை, குண்டாறு ஆகிய 3 நதிகளையும் இணைக்கும் திட்டத்திற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
“காவிரி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு புதிய திட்டங்களை செயல்படுத்த கர்நாடகம் ஒருபோதும் அனுமதிக்காது. அதற்கான வாய்ப்பே இல்லை. காவிரியில் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக நீரை வழங்கவும் சாத்தியமில்லை. எனது தலைமையிலான அரசு, அதற்கு வாய்ப்பளிக்காது. காவிரி நதிநீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி தமிழ்நாடு நடந்து கொள்ள வேண்டும்” என்றார்.
கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக பா.ஜனதா எச்சரித்துள்ளது.