பமீலா கோஸ்வாமி போதை பொருள் வழக்கு: பா.ஜ.க. தலைவர் ராகேஷ் சிங், 2 மகன்கள் கைது + "||" + Pamela Goswami drug case: BJP Leader Rakesh Singh, 2 sons arrested
பமீலா கோஸ்வாமி போதை பொருள் வழக்கு: பா.ஜ.க. தலைவர் ராகேஷ் சிங், 2 மகன்கள் கைது
மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவர் ராகேஷ் சிங் மற்றும் அவரது 2 மகன்களை போதை பொருள் வழக்கொன்றில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்காள பா.ஜ.க. இளைஞரணி பொது செயலாளராக பதவி வகிப்பவர் பமீலா கோஸ்வாமி.
கடந்த சில நாட்களுக்கு முன் தெற்கு கொல்கத்தா நகரில் நியூ அலிப்பூர் பகுதியில் காரில் சென்ற அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், அவரது கைப்பையில் 100 கிராம் எடை கொண்ட, லட்சக்கணக்கான மதிப்புள்ள கோக்கைன் என்ற போதை பொருளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கோஸ்வாமி கைது செய்யப்பட்டார்.
அவருடன் சென்ற நண்பர் பிரபீர் குமார் டே என்பவரும் கைது செய்யப்பட்டார். கோஸ்வாமி போதை பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கோஸ்வாமி காரை நிறுத்தும் இடத்தில் வைத்து 8 வாகனங்களில் வந்த நியூ அலிப்பூர் காவல் நிலைய போலீசார் குழு அவரை பிடித்து சோதனை செய்து, கைது செய்தனர். காரில் இருந்த பமீலா கோஸ்வாமியின் பாதுகாவலரும் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் மாடல் அழகி, நடிகை என பன்முகம் கொண்ட கோஸ்வாமிக்கு வருகிற 25ந்தேதி வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்படும் வகையில், கோஸ்வாமியின் தந்தை அளித்த தகவலின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கொல்கத்தா போலீசார் தெரிவித்தனர்.
இதுபற்றி போலீசார் கூறும்பொழுது, கடந்த ஆண்டு ஏப்ரலில் கோஸ்வாமியின் தந்தை கவுசிக் கோஸ்வாமி போலீசில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதன் அடிப்படையில், கோஸ்வாமி மற்றும் அவரது நண்பர் பிரபீர் இருவரையும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தோம்.
அவர்கள் இரண்டு பேரும் சில காலங்களாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். கொல்கத்தா நகர போலீசாருக்கு கவுசிக் எழுதியுள்ள கடிதத்தில், பமீலாவை பிரபீர் போதை அடிமையாக மாற்றி வைத்துள்ளார்.
பமீலாவை திருமணம் செய்து கொள்வதற்காக தனது மனைவியை விவாகரத்து செய்ய போகிறேன் என பிரபீர் வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதியை பிரபீர் காப்பாற்றவில்லை. அவரது நடவடிக்கைகளை கண்காணியுங்கள் என போலீசாரிடம் கவுசிக் கேட்டு கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்தே பமீலா மற்றும் பிரபீரை நாங்கள் கண்காணித்து, தொடர்ந்து தகவல்களை திரட்டினோம். அவர்களுக்கு போதை பொருள் கடத்தலுடன் உள்ள தொடர்பை விசாரித்தோம். சர்வதேச போதை பொருள் கும்பலுடன் அவர்களுக்கு உள்ள தொடர்பு பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார்.
இதனால் கட்சியில் இருந்து கோஸ்வாமி சஸ்பெண்டு செய்யப்பட கூடும் என பா.ஜ.க. வட்டாரம் தெரிவித்தது.
இந்த வழக்கில் கொல்கத்தா போலீசார் மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவர் ராகேஷ் சிங்கிற்கு நோட்டிஸ் அனுப்பினர். இதற்கு எதிராக இடைக்கால தடை கேட்டு கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சிங் மனு தாக்கல் செய்துள்ளார். எனினும் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் போலீசாரின் விசாரணையில் குறுக்கிட்டதற்காக மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவர் ராகேஷ் சிங் புர்த்வான் நகரில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது 2 மகன்களான சுவம் (வயது 25) மற்றும் சிவம் சிங் (வயது 21) ஆகியோர் ராகேஷின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டனர். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுபற்றி பா.ஜ.க. செய்தி தொடர்பு நிர்வாகி ஷமிக் பட்டாச்சார்யா கூறும்பொழுது, ஏதேனும் சதி திட்டம் நடப்பது போல் உள்ளது. முழு சம்பவமும் தெளிவாக தெரியவில்லை. எங்களுடைய தலைவர்களின் மதிப்பு கெடும் வகையில் நோக்கம் உள்ளது என கூறியுள்ளார்.