தேசிய செய்திகள்

பேர குழந்தை கல்விக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர்; திரண்டது நன்கொடை + "||" + The old man who sold the house for the grandchild's education and lives in the auto; Gathered donations

பேர குழந்தை கல்விக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர்; திரண்டது நன்கொடை

பேர குழந்தை கல்விக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர்; திரண்டது நன்கொடை
மராட்டியத்தில் 2 மகன்கள் மரணித்த சூழலிலும் பேர குழந்தைகள் நலனுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவருக்கு உதவியாக நன்கொடை திரண்டுள்ளது.
புனே,

மராட்டியத்தின் மும்பை நகரில் கார் என்ற பகுதியருகே ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருபவர் தேஸ்ராஜ் (வயது 74).  இவருக்கு 2 மகன்கள் இருந்தனர்.  கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் வேலைக்கு சென்ற 40 வயது மதிக்கத்தக்க இவரது மூத்த மகன் பின்னர் வீடு திரும்பவில்லை.

ஒரு வாரம் கழித்து மகனின் உயிரற்ற உடல் ஆட்டோ ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.  இதனால் மனமுடைந்த வயது முதிர்ந்த தேஸ்ராஜ் கூறும்பொழுது, அவனுடன் என்னுடைய ஒரு பாதி மரணித்து விட்டது.  ஆனால், பொறுப்புகளை சுமக்க வேண்டியதிருந்தது.

துக்கத்திற்கான நேரம் கூட எனக்கு இல்லை.  அடுத்த நாளே ஆட்டோ ஓட்டும் பணியை தொடர்ந்தேன் என கூறுகிறார்.  2 ஆண்டுகள் கழித்து இவரது 2வது மகன் தற்கொலை செய்து விட்டார்.

இதனால் தனது மருமகள், 4 பேர குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பு தேஸ்ராஜுக்கு வந்து விட்டது.  9ம் வகுப்பு படித்த பேத்தியின் கல்வி மற்றும் குடும்ப செலவுக்காக காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை ஆட்டோ ஓட்டியுள்ளார்.

கிடைக்கும் வருவாயில் கல்வி செலவு போக சொற்ப தொகையை 7 பேர் கொண்ட குடும்பத்திற்கான செலவுக்கு வைத்துள்ளார்.

பல நாட்கள் சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லாத சூழலை விவரித்த தேஸ்ராஜ், தனது பேத்தி 12ம் வகுப்பு தேர்வில் 80 சதவீத மதிப்பெண் பெற்ற மகிழச்சியில் அன்று நாள் முழுவதும் அதனை கொண்டாடும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு இலவச சவாரி செய்துள்ளார்.

டெல்லிக்கு பி.எட். படிக்க செல்ல வேண்டும் என்ற பேத்தியின் விருப்பத்திற்காக வீட்டை விற்றுள்ளார்.  பின் அவரது மனைவி, மருமகள் மற்றும் பேர குழந்தைகளை கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டில் விட்டுள்ளார்.

மும்பையில் தொடர்ந்து ஆட்டோ ஓட்டிய அவர், ஆட்டோவிலேயே சாப்பிட்டு, தூங்கியுள்ளார்.  வகுப்பில் முதல் மாணவியாக பேத்தி வந்ததில் தனது அனைத்து வலிகளும் மறைந்து விட்டன என பெருமையுடன் அவர் கூறுகிறார்.

எனது பேத்தி ஆசிரியராக வரும் நாள் தொலைவில் இல்லை.  அந்த நாளில் வாடிக்கையாளர்களுக்கு இலவச சவாரி வழங்குவேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.

இவரது நிலை பற்றி சமூக ஊடகங்கள் வழியே பலருக்கும் தெரியவந்து உதவி செய்ய முன்வந்தனர்.  முகநூல் பயனாளரான கஞ்சன் என்பவர் உதவியால் 200க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்களால் ரூ.5.3 லட்சம் தொகை சேர்ந்தது.

வாழ்க்கையின் ஒரு பகுதி சோக நிகழ்வுடன் சென்றபோதிலும், தனது பேர குழந்தைகளின் வருங்காலத்திற்காக ஆட்டோ ஓட்டும் பணியை தொடர்ந்த இந்த முதியவரின் பின்னணி பற்றி ஆன்லைனில் அறிந்து பலரும் நன்கொடை வழங்க முன்வந்தனர்.  இதன் பயனாக, ரூ.24 லட்சம் நன்கொடை சேர்ந்துள்ளது.

இதற்கான காசோலை அவரிடம் வழங்கப்பட்டது.  இதனால் அவர் வீடு ஒன்றை கட்டி கொள்ளவும், தனது பேத்தியின் கல்வி செலவை ஈடு செய்யவும் உதவும் வகையில் இந்த தொகை அமைந்துள்ளது.  இதுபற்றி இன்ஸ்டாகிராமில் வெளியான வீடியோவில் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.  இறுதியில், அவர் காசோலை பெற்று கொள்ளும் காட்சி இடம் பெற்று உள்ளது.

அவர் நன்கொடை பெற்ற விவரம் அறிந்த மக்கள் பலரும் தங்களது மகிழ்ச்சியை சமூக ஊடகம் வழியே வெளிப்படுத்தி வருகின்றனர்.  பேர குழந்தைகளின் கல்விக்காக தனது வாழ்வின் அனைத்து துக்கங்களையும் மறந்து, அர்ப்பணிப்பு வாழ்க்கை வாழ்ந்த முதியவரின் முகத்தில் தென்பட்ட புன்னகைக்கு ஈடாக எதுவும் கூற இயலாது.