தேசிய செய்திகள்

2-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி; நாடு முழுவதும் மார்ச் 1-ந் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி; அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக செலுத்தப்படும் + "||" + Corona vaccine as the 2nd stage; Vaccination of people over 60 years of age from March 1 across the country; Free payment at government hospitals

2-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி; நாடு முழுவதும் மார்ச் 1-ந் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி; அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக செலுத்தப்படும்

2-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி; நாடு முழுவதும் மார்ச் 1-ந் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி; அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக செலுத்தப்படும்
நாடு முழுவதும் வரும் மார்ச் 1-ந் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட நோய்களுடன் போராடும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி இருப்பதுடன், வலுவான சுகாதார கட்டமைப்புகளாலும், 24 மணி நேரமும் பம்பரமாய் சுழன்று பணியாற்றும் சுகாதார பணியாளர்களாலும் கொரோனா மீட்பில் இந்தியா தொடர்ந்து உலகளவில் முதல் இடத்தில் உள்ளது. உயிர்ப்பலிகளையும் குறைத்துள்ளது. தடுப்பூசிகளுக்கும் இந்தியா, பிற நாடுகளை சார்ந்திராமல், சுயமாக தயாரிப்பது தனிச்சிறப்பாக அமைந்துள்ளது. அந்த வகையில் தற்போது உள்நாட்டில் 2 தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய தடுப்பூசியை, கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியாவில் புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இதேபோன்று ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியை தயாரித்து வினியோகிக்கிறது.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம்
இவ்விரு தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு கடந்த மாதம் 3-ந் தேதி இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து ஜனவரி 16-ந் தேதி உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டமாக, உள்நாட்டில் தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக 1 கோடி சுகாதார பணியாளர்களுக்கும், 2 கோடி முன்கள பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி
இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், அடுத்த கட்டமாக வரும் மார்ச் 1-ந் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட நோய்களுடன் போராடும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாகவும், தனியார் ஆஸ்பத்திரிகளில் கட்டணம் செலுத்தியும் தடுப்பூசி போட ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதை மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் அறிவித்தார்.

10 கோடி பேருக்கு...

இதையொட்டி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தின் 2-வது கட்டம் வரும் திங்கட்கிழமை (மார்ச் 1-ந் தேதி) தொடங்கும். இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட நோய்களுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 10 ஆயிரம் அரசு ஆஸ்பத்திரிகள் மூலமும், 20 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகள் மூலமும் தடுப்பூசி போடப்படும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 கோடி பேருக்கு 
குறைவில்லாமல் இருப்பார்கள்.

இந்த தடுப்பூசிகள் அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக போடப்படும். அதற்கான கட்டணத்தை மத்திய அரசு செலுத்தி விடும். இதற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து, எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கும்.

தனியார் ஆஸ்பத்திரியில் கட்டணம் எவ்வளவு?
தனியார் ஆஸ்பத்திரிகள் மூலம் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர், அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசிக்கு என்ன கட்டணம் வசூலிப்பது என்பது குறித்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடனும், ஆஸ்பத்திரிகளுடனும் விவாதிக்கப்பட்டு வருகிறது. என்ன தொகை கட்டணமாக வசூலிக்கப்படும் என்பதை மத்திய சுகாதார அமைச்சகம் 3 அல்லது 4 நாளில் முடிவு செய்யும்.

கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளில் எதைப் போட்டுக்கொள்வது என்கிற தெரிவை பொதுமக்கள் செய்து கொள்ள முடியுமா என்று கேட்கிறீர்கள். நிரூபிக்கப்பட்ட செயல்திறனுடன், பயனுள்ள 2 தடுப்பூசிகளை பெற்றிருப்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது.

வெற்றிகரமாக நடக்கிறது
இந்தியாவில் இதுவரை 1 கோடியே 7 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 14 லட்சம் பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் தடுப்பூசி திட்டம், எந்தவித தவறோ, புகார்களோ இன்றி வெற்றிகரமாக நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர், மந்திரிகள்
“புதிதாக தடுப்பூசி போடக்கூடிய பிரிவில் உள்ள மந்திரிகள், பிரதமர் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொள்வார்களா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரகாஷ் ஜவடேகர், “மார்ச் 1-ந் தேதி முதல் அவர்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள்” என பதில் அளித்தார்.

உடனிருந்த தகவல் தொழில் நுட்பம், தகவல் தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத், “பெரும்பாலான மத்திய மந்திரிகள் பணம் கொடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறார்கள்” என குறிப்பிட்டார்.
எனவே 1-ந் தேதி முதல், இந்தியாவில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தின் 2-வது கட்டம் தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
2. கடலூர் மாவட்டத்திற்கு 12,900 கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டு வருகின்றனர்
கடலூர் மாவட்டத்துக்கு 12 ஆயிரத்து 900 கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது. இதையடுத்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
3. சென்னிமலை வட்டாரத்தில், ஒரே நாளில் 2,120 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சென்னிமலை வட்டாரத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 120 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது.
4. அரசு ஆஸ்பத்திரிகளில் 551 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள்; பிரதமர் நிதியின் கீழ் அமைக்க நடவடிக்கை
பிரதமர் நிதியின் கீழ் அரசு ஆஸ்பத்திரிகளில் 551 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
5. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு கிடையாது; சுகாதார பணிகள் துணை இயக்குனர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு கிடையாது என்று மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறினார்.