மேற்குவங்காள பாஜக தலைவர் பயணம் செய்த கார் மீது மர்மநபர்கள் தாக்குதல்... + "||" + Bricks allegedly hurled at Bengal BJP chief Dilip Ghosh's car in west Bengal
மேற்குவங்காள பாஜக தலைவர் பயணம் செய்த கார் மீது மர்மநபர்கள் தாக்குதல்...
மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் பயணம் செய்த காரை குறிவைத்து இன்று மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர்.
கொல்கத்தா,
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய 5 கட்டங்களுக்கு முறையே ஏப்ரல் 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2 ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. அடுத்தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இரு கட்சியை சார்ந்தவர்களும் அவ்வப்போது மோதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் இன்று கோட்ச் பிஹர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியை முடிந்த்து விட்டு தனது காரில் கட்சி அலுவலகம் திரும்பிக்கொண்டிருந்தார். சிதல்குட்ச் என்ற பகுதியை கார் கடந்தபோது அங்கிருந்த மர்ம நபர்கள் சிலர் திலீப் கோஷின் காரை குறிவைத்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் திலீப் கோஷின் கார் கண்ணாடிகள் உடைந்தன. மேலும், அவரை பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்த பாஜக ஆதரவாளர் வாகனங்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பாஜகவினர் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கள் கட்சியின் மாநிலத்தலைவர் திலீப் கோஷ் காரை குறிவைத்து தாக்குதல் நடத்தியது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தான் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.