கும்பகோணத்தில் மளிகைப் பொருட்கள் வாங்க ரூ.2 ஆயிரம் போலி டோக்கன்: அமமுக பிரமுகர் மீது வழக்கு + "||" + Buy groceries in Kumbakonam Rs 2,000 fake token case against Ammk Pramukar
கும்பகோணத்தில் மளிகைப் பொருட்கள் வாங்க ரூ.2 ஆயிரம் போலி டோக்கன்: அமமுக பிரமுகர் மீது வழக்கு
கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு மளிகைப் பொருள்களை வாங்குவதற்கான டோக்கன் கொடுத்ததாக அமமுக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கும்பகோணம்
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன
பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக வாக்காளர்களும், அரசியல் கட்சியினரும் புகார் செய்தனர். இது தொடர்பாக ஒருசிலர் கைது செய்யப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன.
இந்த நிலையில் கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் ஒருவர், வாக்காளர்களுக்கு ரூ.2 ஆயிரத்துக்கான போலி டோக்கன் வினியோகம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த டோக்கனில் கும்பகோணம் பெரிய கடைத்தெரு பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையின் பெயர் அச்சிடப்பட்டு ரூ.2 ஆயிரம் எனவும் அச்சிடப்பட்டிருந்தது.
வேட்பாளர் கொடுத்த அந்த டோக்கனை கொண்டு வந்து குறிப்பிட்ட அந்த கடையில் கொடுத்து ரூ.2 ஆயிரத்துக்கான மளிகை பொருட்களை வாக்காளர்கள் கேட்டுள்ளனர். ஆனால் மளிகைக்கடையின் உரிமையாளரோ, வாக்காளர் கொண்டு வந்த டோக்கனுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என தெரிவித்துள்ளார்.
இருந்தபோதும் கடைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து டோக்கனை கொடுத்து மளிகை பொருட்களை கேட்டதால் அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் அந்த டோக்கனுக்கும், தங்கள் கடைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என கடையின் முன்பு நோட்டீஸ் அச்சடித்து ஒட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து கும்பகோணம் தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளரிடம் டோக்கன் பெற்ற வாக்காளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் ஷேக்முகமது கூறியதாவது:-
நான் கடந்த 25 ஆண்டுகளாக இங்கு கடையை நடத்தி வருகிறேன். எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நான் டோக்கன் வழங்கியது கிடையாது. ஆனால் கடந்த 5-ந் தேதி இரவில் இருந்து என்னுடைய கடை முகவரி அச்சிட்ட டோக்கனை பலரும் கொண்டு வந்து இலவசமாக மளிகை பொருட்களை கேட்கின்றனர். அன்று இரவு மட்டுமே சுமார் 200 பேராவது வந்து கேட்டிருப்பார்கள், நான் அப்படி யாருக்கும் டோக்கன் கொடுக்கவில்லை என கூறினேன். எனவே வேட்பாளர் வழங்கிய டோக்கனுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பிரிண்ட் எடுத்து ஒட்டி விட்டேன்.
நேற்று முன்தினம் தேர்தல் என்பதால் கடைக்கு விடுமுறை விடப்பட்டது. இன்று (நேற்று) கடையை திறந்ததும் பலர் டோக்கனோடு வந்தனர். நான் அவர்களிடம் எடுத்துக் கூறியதும், அவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பினர். என்னுடைய கடையின் பெயரை பயன்படுத்தி இந்த டோக்கனை கொடுத்தது யார்? என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு மளிகைப் பொருள்களை வாங்குவதற்கான டோக்கன் கொடுத்ததாக அமமுக பிரமுகர் கனகராஜ் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.