மாநில செய்திகள்

தென் தமிழகத்தில் இடி, மின்னலுடன் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + Thunder and lightning in southern Tamil Nadu Chance of rain today - Meteorological Center Information

தென் தமிழகத்தில் இடி, மின்னலுடன் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் தமிழகத்தில் இடி, மின்னலுடன் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் பகல் நேரத்தில் வெளியில் தலை காட்டுவதற்கே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். சென்னையிலும் மற்ற மாவட்டங்களுக்கு நிகராக வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். வெயிலின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க பெண்கள் முகத்தை துப்பட்டாவால் மூடியபடியும், குடை பிடித்தப்படியும் சென்றதை காணமுடிந்தது.

வெயிலின் உஷ்ணத்தை தணிப்பதற்காக சாலையோரங்களில் தற்காலிகமாக முளைத்துள்ள குளிர்பான கடைகளில் பொதுமக்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் புழுக்கம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான வீடுகளில் மின்விசிறிகள் ஓய்வின்றி சுற்றுகின்றன. இதேபோல ஏ.சி.களின் பயன்பாடும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கிடையே கோயம்பேடு உள்பட சில இடங்களில் நேற்று லேசான மழை பெய்தது. இந்தநிலையில், வெயிலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 13-ந்தேதி (இன்று) தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (புதன்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், வட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் காற்றுடன் (30 கி.மீ. முதல் 40 கி.மீ. வேகத்தில்) கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நேற்று காலை 11.45 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி குழித்துறை, உசிலம்பட்டியில் தலா 4 செ.மீ. மழை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜெயங்கொண்டம், திருப்புவனத்தில் தலா 3 செ.மீ., வாலிநோக்கம், வலங்கைமான், ஆழியார், கெட்டியில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் ஏப்ரல் 12-ந் தேதி வரை தமிழகத்தில், தென்காசி மாவட்டத்தை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவை விடவும் குறைவாகவே பதிவாகியிருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் 89.3 மி.மீ மழை இயல்பாக பதிவாகவேண்டும். ஆனால் இயல்பு அளவையும் தாண்டி 98.4 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இது இயல்பு அளவை விடவும் 10 சதவீதம் அதிகம் ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.