மாநில செய்திகள்

2.70 கோடி குடும்பங்களுக்கு 2-ம் தவணையாக கொரோனா நிவாரணம்; ஜூன் 3-ந் தேதிக்குள் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேட்டி + "||" + 2nd installment of corona relief for 2.70 crore families; Rs 2,000 will be paid by June 3; Interview with MK Stalin

2.70 கோடி குடும்பங்களுக்கு 2-ம் தவணையாக கொரோனா நிவாரணம்; ஜூன் 3-ந் தேதிக்குள் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேட்டி

2.70 கோடி குடும்பங்களுக்கு 2-ம் தவணையாக கொரோனா நிவாரணம்; ஜூன் 3-ந் தேதிக்குள் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேட்டி
தமிழகத்தில் 2.70 கோடி குடும்பங்களுக்கு 2-ம் தவணை கொரோனா நிவாரண நிதியாக ஜூன் 3-ந் தேதிக்குள் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக சேலம், கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்கு சென்றார். முதலில் நேற்று முன்தினம் சேலம், கோவை ஆகிய இடங்களுக்கு சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

திருச்சி
நேற்று காலை மதுரையில் தனது ஆய்வு பணிகளை தொடங்கினார். அதைத் தொடர்ந்து திருச்சி சென்றார்.திருச்சி அரசு மருத்துவமனை, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி.), கலையரங்கம் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் என்.ஐ.டி.யில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-
நான் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற நேரம் கொரோனா தொற்று வேகமாக பரவிக்கொண்டிருந்த நேரமாகும். பெரும் சவால்களுக்கு இடையே ஆட்சிப்பொறுப்பை ஏற்று இருக்கிறேன். வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோதே அதிகாரிகள் பலர் மரியாதை நிமித்தமாக என்னை சந்திக்க வந்தபோது கூட அவர்களிடம் நான் கொரோனாவை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக தான் ஆலோசனை வழங்கினேன். தொடர்ந்து பதவியேற்ற நாள் முதல் இந்த நாள் வரை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது.

மகிழ்ச்சியான நாள்
நேற்று சேலம், திருப்பூர், கோவை நகரங்களிலும் கொரோனா தடுப்பு ஆய்வு பணிகளை முடித்து விட்டு இன்று (அதாவது நேற்று) காலை மதுரையில் ஆய்வு செய்தேன். இப்பொழுது திருச்சியில் ஆய்வு பணிகளை முடித்துவிட்டு வந்திருக்கிறேன். நான் ஆட்சியமைத்த போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட, தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து ஒருவர் கூட பாதிக்கப் படவில்லை என்கிற செய்தி வரும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாளாக கருதுகிறேன். கொரோனா தொற்றில் இருந்து தமிழக மக்களை பாதுகாப்பதையே தலையாய பணியாக கருதி செய்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

கருப்பு பூஞ்சை நோய்

கேள்வி:- கொரோனா தொற்றை தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய் தாக்கமும், தமிழகத்தில் தீவிரமாக பரவி வருகிறது. அதை தடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?

பதில்:- இதுபற்றி சுகாதாரத்துறை செயலாளர் கூறியிருக்கிறார். அதனை இப்போது அமைச்சர் சுப்பிரமணியன் எடுத்துக்கூறுவார். அமைச்சர் சுப்பிரமணியன்:- தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஸ்டீராய்டு சிகிச்சை அளிக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கருப்பு பூஞ்சை தாக்கம் ஏற்படுகிறது. தமிழகத்தில் 9 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் உள்ளன. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொது முடக்கம்

கேள்வி:- கொரோனா பரவலை தடுப்பதற்கு பொது முடக்கம் தீர்வாகாது என நீங்கள் ஏற்கனவே கூறி இருக்கிறீர்கள். ஆதலால் மாற்று திட்டம் ஏதாவது உள்ளதா? அதனை எப்போது அமல்படுத்த போகிறீர்கள்?

பதில்:- பொதுமக்களுக்கு சில சலுகைகள் அளிக்கப்பட வேண்டியது இருக்கிறது. முதலில் காலை 6 முதல் 12 மணி வரை மட்டும் பொது மக்கள் வெளியில் நடமாடலாம் என அறிவித்திருந்தோம். பின்னர் அதனை இப்போது 6 முதல் 10 மணி வரை நாம் மாற்றி இருக்கிறோம். ஆனாலும் பூரண கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. ஒரு பத்து மாவட்டங்களில் தான் இந்த பிரச்சினை அதிகமாக உள்ளது. கோவையில் நேற்று நான் ஆய்வு செய்தபோது அங்குள்ளவர்கள் அண்டை மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வருகிறார்கள். கேரளா, கர்நாடகாவில் இருந்து வருகிறார்கள். அதனை கட்டுபடுத்த முடியவில்லை என்கிறார்கள். கோவையில் வணிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இன்னும் கட்டுப்பாடுகளை விதியுங்கள் என கூறினார்கள். ஒரு வாரம் அல்ல இரண்டு வாரம் கூட நீட்டியுங்கள் என கூறினார்கள். ஆதலால்தான் நாளை (அதாவது இன்று) காலை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறோம். வல்லுநர்கள் மற்றும் மருத்துவர்களையும் அழைத்து இருக்கிறோம். அவர்களுடன் 
ஆலோசனை நடத்திவிட்டு அறிவிப்போம்.

கொரோனா நிதி 2-வது தவணை

கேள்வி:- கொரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை எப்போது வழங்கப்படும்?

பதில்:- கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி தான் வழங்குவோம் என அறிவித்திருந்தோம். ஆனால் கொரோனா தாக்கத்தின் வீரியம் அதிகமாக இருப்பதால் அதற்கு முன்னதாகவே அதனை இரண்டாக பிரித்து ரூ.2 ஆயிரம் வழங்கி விட்டோம். அந்த வகையில் 2.70 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மீதி தவணை ரூ.2 ஆயிரம் ஜூன் 3-ந் தேதிக்குள் வழங்கப்படும்.

கேள்வி:- கொரோனா முதலாவது அலை பரவலின் போது மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்தது. ஆனால் தற்போது மாநில அரசுகளே பார்த்துக்கொள்ளும்படி கூறி இருப்பதாக தெரிகிறது. மேற்கு வங்காள முதல்-மந்திரி, மத்திய அரசு செயல்பாடு திருப்திகரமாக இல்லை என கூறியிருக்கிறார். நீங்கள் அதனை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினை இருக்கிறது. நானே பிரதமரிடம் பேசி இருக்கிறேன். மத்திய மந்திரி பியூஷ் கோயலை நான் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் அட்ஜஸ்ட் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கும் பல பிரச்சினைகள் இருக்கிறது. கழக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரடியாகவே டெல்லிக்கு சென்று நான்கு நாட்கள் தங்கி அவரைப்பார்த்து பிரச்சினைகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஒடிசாவில் தற்போது புயல் வரப்போகிறது என ஒரு சூழல் உள்ளது. அதன் காரணமாக ஆக்சிஜன் வரத்து குறைந்துவிட்டால் என்ன 
செய்வது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக மகாராஷ்டிராவை தொடர்பு கொண்டிருக்கிறோம். அவர்களிடமும் ஆக்சிஜன் வாங்குவதற்கு அனுமதி வாங்கி வைத்திருக்கிறோம். எந்த பிரச்சினையும் இல்லை. தடுப்பூசியை பொறுத்தவரை நாம் கேட்ட அளவிற்கு அவர்கள் இன்னும் கொடுக்கவில்லை. தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.

மக்கள் இயக்கம்

கேள்வி:- பெருநகரங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுவது போல் பிற்பட்ட மாவட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?

பதில்:- எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகளை வைத்து இதனை ஒரு மக்கள் இயக்கமாக நடத்த வேண்டும். மாநகரம், நகரம் பகுதிகள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் அதனை ஒரு விழிப்புணர்வு இயக்கமாக நடத்த வேண்டும் என சொல்கிறார்கள். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கேள்வி:- பொது முடக்கம் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் மேலும் நீட்டிக்கப்படுமா?

பதில்:- அதற்காகத்தான் நாளை (இன்று) தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.

முற்றுப்புள்ளி

கேள்வி:- உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்கிற திட்டம் நல்ல முறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்காக ஒரு தனித்துறை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த துறை நிரந்தரமாக்கப்படுமா?

பதில்:- தற்போது கொரோனா தடுப்பு பணியைத்தான் முழு நோக்கமாக கொண்டு இந்த அரசு செயல்பட்டு வருகிறது. முதலில் கொரோனாவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம். உங்கள் எண்ணத்திற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். கொரோனா பிரச்சினை முடிந்த பின்னர் அது பற்றி பேசுவோம்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

கேள்வி:- பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்தப்படுமா?

பதில்:- அதுபற்றி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு செய்து அறிவிப்பார்.

கேள்வி:- ஆக்சிஜன் உற்பத்தி செய்வதில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிறைய பிரச்சினை இருக்கிறது என்கிறார்கள். அதனை எப்படி சரி செய்யப்போகிறீர்கள்?

பதில் (அமைச்சர் மா.சுப்பிரமணியன்):- ஆக்சிஜனை பொறுத்தவரை நமக்கு தேவை 470 மெட்ரிக் டன். தற்போது நாம் 400 டன் உற்பத்தி செய்கிறோம். மீதம் இருக்கிற இந்த 70 மெட்ரிக் டன்னை முதல் முறையாக ஒடிசாவில் இருந்து இறக்குமதி செய்தோம். ரூர்கேலா போன்ற இடங்களில் இருந்து ஆக்சிஜன் வருவது வரலாற்றில் இதுவே முதல் முறை. தொடர்ந்து முதல்-அமைச்சர், பிரதமரிடம் ஆக்சிஜன் கேட்டு வலியுறுத்தி வருகிறார். இன்னும் மூன்று நாளில் தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற நிலை இருக்காது.

முதல்-அமைச்சர் பதில்:- நான் 7-ந் தேதி பொறுப்பு ஏற்ற போது பெரிய அளவில் தட்டுப்பாடு இருந்தது. அதாவது இரவு 2 மணி, 3 மணி, 4 மணிக்கெல்லாம பேசும் அளவிற்கு பிரச்சினை இருந்தது. உதாரணத்திற்கு சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் 100 ஆம்புலன்ஸ் வரிசையில் நிற்கும்‌. ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகளை உள்ளே அழைத்துச்செல்ல முடியாத சூழல் 
இருந்தது. இப்போது 4, 5 வாகனங்கள் தான் நிற்கின்றன. அந்த அளவுக்கு சூழல் மாறி இருக்கிறது. அதனையும் குறைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்:- சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் கூறியபடி வாகனங்கள் வரிசையாக நிற்பது பற்றிய செய்தி ஊடகங்களில் வந்தவுடன் முதல்-அமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தியது, ‘வாகனங்களில் இனிமேல் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் இருக்கக்கூடாது. அவர்களுக்கு ஜீரோ டிலே வார்டு என்பதனை உருவாக்கி அவர்களை முதலில் வார்டில் உட்கார வைத்து அதன் பின்னர் படுக்கை வசதிக்கு அனுப்புங்கள்’ என்றார்கள். நாளை காலை 9 மணிக்கு ஜீரோடிலே வார்டு வசதி திறக்கப்படுகிறது.

சம்பளம் குறைப்பா?

கேள்வி:- ஆசிரியர்கள் சம்பளம் பாதியாக குறைக்கப்படும் என கூறப்படுகிறதே. அப்படி ஒரு திட்டம் பரிசீலனையில் இருப்பதாக வேகமாக பரவி வருகிறதே?

பதில்:- பரவுகிறது என்பதற்கும், வதந்திகளுக்கும் பதில் சொல்ல முடியாது.

கேள்வி:- நீங்கள் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்திக்கும் திட்டம் உள்ளதா?

பதில்:- இப்போது டெல்லிக்கு போக முடியாத ஒரு சூழல் உள்ளது. அதற்கான சூழல் உருவாகிற போது நிச்சயமாக டெல்லிக்கு சென்று ஒரு முதல்-அமைச்சர் பிரதமரிடம் என்ன கேட்க வேண்டுமோ, நமக்கு அனுப்ப வேண்டிய நிதி, அனுப்ப வேண்டிய வசதிகள், நாம் கேட்க வேண்டிய உரிமைகள் பல இருக்கிறது. அவற்றையெல்லாம் உரிமையோடு கேட்போம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன்:- மூன்று நாளைக்கு முன்னால் பிரதமருடன் ஒரு காணொலி காட்சி. அதில் பங்கேற்ற நமது முதல்-அமைச்சர் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள மாநகராட்சி ஆணையர்கள் 10 பேர் கலந்து கொண்டனர். அதில் சென்னை மாநகராட்சி ஆணையர் முதல்-அமைச்சர் முன்னிலையிலேயே பேசினார். இன்னோவா காரை ஆம்புலன்ஸ் வசதியுடன் உருவாக்குவது, மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலேயே போய் தடுப்பூசி போடுவது, தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வரும் 37 ஆயிரம் நோயாளிகளுக்கு 250 மருத்துவர்கள் தொலைபேசியில் மருத்துவ ஆலோசனை சொல்வது பற்றி எடுத்து கூறியபோது, பிரதமர் உடனடியாக சொன்னது சென்னையைப் போலவே இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறினார். அதற்காக நமது முதல்-அமைச்சருக்கு பிரதமர் பாராட்டும் தெரிவித்தார்.

பின்னர் திருச்சியில் ஆய்வை முடித்துக்கொண்டு மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து அரசுத் துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
2. ‘ஏழை மக்களை கைதூக்கி விடும் அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது’ மு.க.ஸ்டாலின் பேச்சு
‘ஏழை மக்களை கைதூக்கி விடும் அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது’ என்று மக்களை தேடி மருத்துவ மையம் திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
3. சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி வளாகத்தில் 150 ஆண்டு பழமையான ஆப்பிரிக்க ஆனைப்புளி பெருக்க மரம்
சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி வளாகத்தில் 150 ஆண்டுகள் பழமையான ஆப்பிரிக்க ஆனைப்புளி பெருக்கமரத்தை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு அதன் சிறப்புகள் குறித்த கல்வெட்டை திறந்து வைத்தார்.
4. 77-வது பிறந்த நாள்: வைகோவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று தனது 77-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
5. ரூ.699 கோடியில் 6 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மகளிர் சுயஉதவி குழுக்கள், உற்பத்தியாளர், தொழில் குழுக்கள் உள்பட ரூ.699.26 கோடியில் 6 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.