தேசிய செய்திகள்

சோக்சி மிக பெரிய குற்றம் செய்தவர்; எங்களிடம் ஒப்படையுங்கள்: டொமினிகா அரசிடம் இந்தியா வேண்டுகோள் + "||" + Choksi is the perpetrator of the biggest crime; Hand over to us: India appeals to the Government of Dominica

சோக்சி மிக பெரிய குற்றம் செய்தவர்; எங்களிடம் ஒப்படையுங்கள்: டொமினிகா அரசிடம் இந்தியா வேண்டுகோள்

சோக்சி மிக பெரிய குற்றம் செய்தவர்; எங்களிடம் ஒப்படையுங்கள்:  டொமினிகா அரசிடம் இந்தியா வேண்டுகோள்
மெகுல் சோக்சி மிக பெரிய குற்றம் செய்துள்ளார் எனவும் இந்திய குடிமகனான அவரை திரும்ப ஒப்படைக்கும்படியும் டொமினிகா அரசிடம் இந்தியா கேட்டு கொண்டுள்ளது.
புதுடெல்லி,

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று, அதனை திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டனர்.  இதனை தொடர்ந்து, சி.பி.ஐ. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.  இதனையடுத்து அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினர்.

இதில், கீதாஞ்சலி குழும உரிமையாளரான மெகுல் சோக்சி, ஆன்டிகுவாவில் தஞ்சம் அடைந்தது தெரியவந்தது.  அவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் ஆன்டிகுவாவுடன் ஏற்படுத்தப்படவில்லை.  இதனால் சோக்சியை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

அவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் விசாரணைக்கு ஆஜராகும்படி, மெகுல் சோக்சிக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, மெகுல் சோக்சிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை சிறப்பு கோர்ட்டு பிறப்பித்தது.  மெகுல் சோக்சி மீது சி.பி.ஐ. 2 குற்றப்பத்திரிகைகளையும் தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில், வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டு, வெளிநாட்டில் தலைமறைவான மெகுல் சோக்சியை காணவில்லை என அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் சில தினங்களுக்கு முன் கூறினார்.

இந்நிலையில், ஆன்டிகுவா மற்றும் பார்புடாவின் பிரதமரான கேஸ்டன் பிரவுனி கடந்த செவ்வாய் கிழமை கூறும்பொழுது, மெகுல் சோக்சிக்கு எதிராக இரண்டு வழக்குகள் உள்ளன.  அவர், நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கான நம்பத்தகுந்த தகவல் எதுவும் எங்களிடம் இல்லை.  அவர் நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் இன்னும் வசித்து வரலாம்.  அவரது இருப்பிடம் பற்றி கண்டறிய போலீசார் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள் என கூறினார்.

இந்நிலையில், சோக்சி டோமினிகா நாட்டில் உள்ளார் என கூறப்படுகிறது.  இதுபற்றி சோக்சியின் வழக்கறிஞரான விஜய் அகர்வால் கடந்த 2 நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, சோக்சியின் உடலில் அவரை கொடுமைப்படுத்தியதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.

அவரை ஆன்டிகுவா நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை டோமினிகா நாட்டில் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என கூறினார்.

சோக்சியை கட்டாயப்படுத்தி ஆன்டிகுவாவில் இருந்து டோமினிகா நாட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர்.  ஆன்டிகுவாவின் ஜாலி துறைமுகத்தில் இருந்து பல்வேறு நபர்கள் அவரை அழைத்து சென்றுள்ளனர்.  அதன்பின் டோமினிகாவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கடந்த ஞாயிற்று கிழமை அங்கிருந்து விட்டு, பின்னர் அடுத்த நாள் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து சென்றுள்ளனர்.  இதனை சோக்சி எங்களிடம் தெரிவித்துள்ளார் என்றும் அகர்வால் கூறினார்.

இந்நிலையில், மெகுல் சோக்சி டோமினிகா நாட்டில் போலீஸ் காவலில் சிறையில் உள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.  அதில் அவர், ஆள் அடையாளம் தெரியாத வகையில் மெலிந்த தேகத்துடன் காணப்படுகிறார்.  மற்றொரு புகைப்படத்தில் அவரது வழக்கறிஞர் கூறியதுபோல் சோக்சியின் வலது மற்றும் இடது கைகளில் காயம் ஏற்பட்டதற்கான தழும்புகளும் காணப்படுகின்றன.

இந்த நிலையில், மெகுல் சோக்சி மிக பெரிய குற்றம் செய்துள்ளார் எனவும் இந்திய குடிமகனான அவரை திரும்ப ஒப்படைக்கும்படியும் டொமினிகா அரசிடம் இந்தியா கேட்டு கொண்டுள்ளது.

டொமினிக் அரசை இந்திய தூதரகம் வழியே தொடர்பு கொண்ட மத்திய அரசு, இன்டெர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் அளிக்கப்பட்ட மெகுல் சோக்சி, இந்திய குடிமகனாக எங்களுடைய நாட்டில் இருந்து தப்பி சென்ற நபராகவே நடத்தப்பட வேண்டும்.

அவரை நாடு கடத்தி இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.  நாட்டு மக்களின் கோடிக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டதில் அவருடைய உண்மையான பங்கு பற்றி இந்திய சட்டத்திற்கு பதிலளிக்க வேண்டும்.

அவர் இந்திய பிரஜை இல்லை என மறுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.  தனது குற்றங்களை மறைப்பதற்காக வேறு நாட்டு குடிமகன் போல் தன்னை முன்னிறுத்துகிறார் என்று தெரிவித்து உள்ளது.

சோக்சியை நேரடியாக இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி டொமினிகா அரசை ஆன்டிகுவா அரசும் வலியுறுத்தி வந்தது.  எனினும், இதற்கு டொமினிகா அரசு ஒத்துழைப்பு வழங்காத நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் சோக்சி, எங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என ஆன்டிகுவா அரசு அறிக்கை விடுத்தது.