தேசிய செய்திகள்

உக்ரைனில் இருந்து 184 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொண்ட முதல் விமானம் இந்தியா வந்தடைந்தது + "||" + The first aircraft carrying 184 oxygen concentrators arrived in India from Ukraine

உக்ரைனில் இருந்து 184 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொண்ட முதல் விமானம் இந்தியா வந்தடைந்தது

உக்ரைனில் இருந்து 184 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொண்ட முதல் விமானம் இந்தியா வந்தடைந்தது
உக்ரைன் நாட்டில் இருந்து 184 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொண்ட முதல் விமானம் இன்று காலை இந்தியா வந்தடைந்தது.
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா வைரசின் 2வது அலையில் பொதுமக்கள் அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.  முதல் அலையில் இல்லாத வகையில் தொற்று எண்ணிக்கை லட்சக்கணக்கில் பதிவானது.  கடந்த ஏப்ரல் முதல் வாரத்திற்கு பின்னர் இந்த விகிதம் அதிகரித்து வந்த நிலையில், சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்தியாவில் நேற்றைய பதிவின்படி, கடந்த 24 மணிநேரத்தில் 1,65,553  பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.  இது, கடந்த 46 நாட்களில் இல்லாத வகையில் மிக குறைவாகும்.

இதனால், நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2  கோடியே 78 லட்சத்து 94 ஆயிரத்து 800 ஆக அதிகரித்தது.  கொரோனா பாதிப்பு விகிதம் 8.02 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கு உதவுவதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல சர்வதேச நாடுகள் முன்வந்து உள்ளன.  இதன்படி, தங்களுடைய நாட்டில் இருந்து தடுப்பூசிகள், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை விமானங்களில் அனுப்பி வைத்து வருகின்றன.

கொரோனாவின் 2வது அலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் பலர் அவதிப்படுகின்றனர்.  இதனால், அதனை ஈடுகட்டும் வகையில், உள்நாட்டிலேயே ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணியில் அரசு இறங்கியது.

இந்நிலையில், உக்ரைன் நாட்டில் இருந்து 184 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொண்ட முதல் விமானம் இன்று காலை இந்தியா வந்தடைந்துள்ளது.  இதற்கு மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி டுவிட்டரில் நன்றி தெரிவித்து உள்ளார்.