மாநில செய்திகள்

கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு + "||" + Plus-2 general election canceled in Tamil Nadu due to corona spread - MK Stalin's announcement

கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில், வகுப்புகள் ‘ஆன்லைனில்’ மட்டுமே நடத்தப்பட்டு வந்தன.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஏற்கனவே 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வையும், 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வையும் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண், உயர்கல்விக்கு மிகவும் முக்கியம் என்பதால் அந்த தேர்வை எப்படியாவது நடத்தி விட வேண்டும் என்ற முயற்சியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வந்தது.

கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் ஏற்கனவே மே 3- ந்தேதி தொடங்கி நடைபெறுவதாக இருந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, நோய்த்தொற்றின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

அந்த அறிவிப்பை தொடர்ந்து குஜராத், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்கள், மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தும் பிளஸ்-2 பொதுத்தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டன.

இந்தநிலையில் மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று 2-ம் அலை காரணமாக பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு மக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் செவ்வனே செய்து, அதில் வெற்றியும் பெற்று வருகிறது. இந்தநிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத இருக்கும் மாணவர்களின் கல்வியிலும், பாதுகாப்பிலும் மிகுந்த அக்கறை கொண்ட தமிழக அரசு, பொதுத்தேர்வுகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரையும் கலந்து ஆலோசித்து தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு, சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடக்கவிருந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஏற்கனவே ரத்து செய்துள்ளது. பல்வேறு மாநிலங்களும் இதே காரணத்திற்காக, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்துள்ளன.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து, கடந்த 3 நாட்களாக பள்ளி அளவில் தொடங்கி, மாவட்டம் மற்றும் மாநில அளவில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், ஊடகவியலாளர்கள், பொது சுகாதாரம் மற்றும் உளவியல் நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் கருத்துகள் கவனமுடன் கேட்டறியப்பட்டன.

பல்வேறு தரப்பினரும் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆதரவாகவும், மறுத்தும் கருத்துகளை தெரிவித்திருந்தாலும், அனைத்து தரப்பினரும் மாணவர்களின் உடல் மற்றும் மன நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக உள்ளனர்.

கொரோனா பெரும்தொற்றின் 2-ம் அலை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் தீவிரமாக இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து 3-வது அலையும் வர வாய்ப்புள்ளது என்று மருத்துவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், தற்போதுள்ள விதிகளின்படி, 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த இயலும் என்ற நடைமுறை இருப்பதால் 18 வயதுக்கு குறைவான, தடுப்பூசி போடப்படாத மாணவர்களை தேர்வு எழுத ஒரே நேரத்தில் வரச்செய்வது, தொற்றினை அதிகரிக்க செய்யலாம் என்றும் வல்லுனர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

மாநில கல்வித்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மட்டுமே உயர்கல்வி வாய்ப்புகளுக்கான தகுதியாக கருதப்படவேண்டும் என்ற கொள்கை நிலைப்பாட்டில் இந்த அரசு உறுதியாக இருந்தாலும், தேர்வினை மேலும் தள்ளி வைப்பது, மாணவர்களை மனதளவில் பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்று டாக்டர்கள் கருதுவதால், அவர்களது அறிவுரை மற்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் வரப்பெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது.

இந்தநிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதை முடிவு செய்ய, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில், உயர்கல்வித்துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோரை கொண்ட ஒரு குழு அமைக்கப்படும்.

இந்த குழு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து, விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். இந்தக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித்தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.

அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களை கொண்டு மட்டுமே, தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும்.

பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அகில இந்திய அளவில் நடத்தப்படும் ‘நீட்' போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்துவது உகந்ததாக இருக்காது என்று தமிழக அரசு கருதுகிறது.

இதுகுறித்த அறிவிப்புகள் இதுவரை எதுவும் வெளிவராத நிலையில், உயர்கல்விக்காக நடத்தப்படும் பல்வேறு நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், மாணவர்களின் உடல்நலன் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், மாநில கல்வித்திட்ட அடிப்படையில், உயர்கல்வி சேர்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் முதல் வாரம் தமிழகம் வருகை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழ்நாட்டிற்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் வருகை தருகிறார்.
2. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக, அமமுக நிர்வாகிகள்
ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை சேர்ந்த பிற கட்சியினர் தி.மு.கவில் இணைந்தனர்.
3. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தானது.
4. ஜனாதிபதி ராம் நாத் கோவிந்துடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு ; கருணாநிதி படத்திறப்பு விழாவுக்கு அழைப்பு
டெல்லியில் ஜனாதிபதி ராம் கோவிந்தை தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார் அப்போது கருணாநிதி படத்திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
5. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் பயணம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் பயணம் மேற்கொள்கிறார்.