உலக செய்திகள்

ஆகஸ்ட் இறுதிக்குள் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும்: வெள்ளை மாளிகை + "||" + US Troops To Leave Afghanistan By End Of August: White House

ஆகஸ்ட் இறுதிக்குள் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும்: வெள்ளை மாளிகை

ஆகஸ்ட் இறுதிக்குள் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும்: வெள்ளை மாளிகை
ஆகஸ்ட் இறுதிக்குள் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேறும் என எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று நேட்டோ படையினர் வெளியேறினர். இதனால், ஆப்கானிஸ்தானில் இருந்து சில தினங்களில் அமெரிக்க படைகள் வெளியேறலாம் என  யூகங்கள்  எழுந்த நிலையில்,  ஆகஸ்ட் மாத இறுதியில்தான் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறும் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் இருப்பது ஏன்?

உலகை உலுக்கிய அமெரிக்கவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு அடைக்கலம் கொடுத்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா கடந்த 2001-ம் ஆண்டு போர் தொடுத்தது. இதில் அங்கு ஆட்சியிலிருந்த தலீபான்கள் விரட்டியடிக்கப்பட்டு, ஜனநாயக ஆட்சி கொண்டுவரப்பட்டது.‌ 

ஆனாலும் அதே ஆண்டு தலீபான்களுக்கும், ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடங்கியது.‌ இந்தப் போரில் அமெரிக்கா தலைமையில் நேட்டோ நாடுகளின் படைகள் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக களம் இறங்கின. 20 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த உள்நாட்டு போரில் தலீபான்களின் தாக்குதலில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் தரப்பில் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இந்த சூழலில் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும் இந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. இதன் பலனாக நீண்ட இழுபறிக்கு பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது தலீபான்கள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கு பிரதிபலனாக 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகள் முழுமையாகத் திரும்ப பெறப்படும் என உறுதியளிக்கப்பட்டது.‌

ஆனால் அமெரிக்காவில் டிரம்புக்கு பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஜோ பைடன் 2021-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப‌ பெறப்படும் என அறிவித்தார். அதன்படி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகின்றன.‌ 

இந்த நிலையில் தலீபான்களுக்கு எதிரான போரின் மையப்பகுதியாக விளங்கி வரும் பக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. இது ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இறுதி கட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.‌ தலைநகர் காபூலில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் பக்ராம் நகரில் அமைந்துள்ள இந்த விமானப்படைத்தளம் ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய விமானப்படை தளம் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

1. வெள்ளை மாளிகையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியை சந்திக்கிறார், ஜோ பைடன்
வெள்ளை மாளிகையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்திக்கிறார்,
2. ராணுவத்தை பயன்படுத்தி தற்காலிக ஆஸ்பத்திரிகளை அமைக்க வேண்டும்; நாடுதழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்துங்கள்; இந்தியாவுக்கு வெள்ளை மாளிகை அதிகாரி யோசனை
கொரோனாவை கட்டுப்படுத்த நாடுதழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கு வெள்ளை மாளிகை தலைமை மருத்துவ ஆலோசகர் யோசனை தெரிவித்துள்ளார். ராணுவத்தை பயன்படுத்தி தற்காலிக ஆஸ்பத்திரிகளை அமைக்குமாறும் அவர் கூறியுள்ளார்.
3. கொரோனா நெருக்கடிக்கு தீர்வு காண இந்தியாவுக்கு அமெரிக்கா உதவுமா? வெள்ளை மாளிகை பதில்
கொரோனா நெருக்கடிக்கு தீர்வு காண இந்தியாவுக்கு அமெரிக்கா உதவுமா என்ற கேள்விக்கு வெள்ளை மாளிகை பதில் அளித்துள்ளது.