தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 13 மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீக்கம் + "||" + J&K now lifts weekend curfew from 13 districts

ஜம்மு காஷ்மீரில் 13 மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீக்கம்

ஜம்மு காஷ்மீரில் 13 மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீக்கம்
ஜம்மு காஷ்மீரில் புல்வாமா, ஷோபியன் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட வார இறுதி ஊரடங்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு,

இந்தியாவில் கொரோனா 2-வது அலையால் 3 லட்சித்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், பிறகு அந்தந்த மாநிலங்கள் மேற்கொண்ட ஊரடங்கு காரணமாக தற்போது இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தற்போதைய நிலவரப்படி 4,048 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 3,08,246 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ள நிலையில் 4,335 பேர் பலியாகியுள்ளனர். 40,14,703 பேருக்கு முதல் தவணையும், 7,46,876 பேருக்கு 2ஆம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து  ஜம்மு, கதுவா, சம்பா, பூஞ்ச், ராஜோரி, உதம்பூர், அனந்த்நாக், பண்டிபோரா, பாரமுல்லா, புட்கம், காண்டர்பால், புல்வாமா மற்றும் ஷோபியன் ஆகிய 13 மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருவதாக ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது.

இந்த மாவட்டங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறக்கப்படலாம் எனவும் இருப்பினும், தினமும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உட்புற வணிக வளாகங்கள் மற்றும் மால்களில், தடுப்பூசி போட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது. உணவகங்கள் மற்றும் பார்களில் 50 சதவீதம் பேருடன் இயங்க அனுமதியளிக்கப்படுகிறது.

நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி கிடையாது. மேலும் மற்ற ஏழு மாவட்டங்களில், வார இறுதி மற்றும் தினசரி இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். அதேசமயம், அனைத்து வெளிப்புற கடைகள் மற்றும் மால்கள் திங்கள் முதல் வெள்ளி வரை திறக்க அனுமதிக்கப்படுகின்றன. உட்புற ஷாப்பிங் வளாகங்கள் மற்றும் மால்களில் 25 சதவீத கடைகள் திறக்க அனுமதிக்கப்படுகின்றன என்பன உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.