உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் கடத்தப்பட்டதற்கு ஆதாரங்கள் இல்லை: பாக்.உள்துறை மந்திரி + "||" + No evidence of abduction in Afghan envoy's daughter's case: Pakistan interior minister

ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் கடத்தப்பட்டதற்கு ஆதாரங்கள் இல்லை: பாக்.உள்துறை மந்திரி

ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் கடத்தப்பட்டதற்கு ஆதாரங்கள் இல்லை: பாக்.உள்துறை மந்திரி
ஆப்கானிஸ்தான் தூதர் மகள் கடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் தங்கள் விசாரணையில் கிடைக்கவில்லை என்று பகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத், 

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான உறவுகள் நீண்ட காலமாக சிதைந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் வன்முறை காரணமாக சமீபத்திய வாரங்களில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேலும் மோசமடைந்து வருகின்றன. நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள தலீபான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்து வருவதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் தூதர் நஜிப் அலிகேலின் மகள் மர்ம நபர்களால் கடத்தி சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  27 வயதான சில்சிலா அலிகேல் கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து கடத்தி சென்றனர். பின்னர் அவர்கள் சில்சிலா அலிகேலை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர்.‌

கடத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர் அவர்கள் சில்சிலா அலிகேலை சாலையில் விட்டுவிட்டு சென்றனர். தனது மகள் கடத்தப்பட்டு சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டது மனிதாபிமானமற்ற தாக்குதல் என கூறி கண்டித்த தூதர் நஜிப் அலிகேலின், தற்போது தனது மகள் நலமாக இருப்பதாக  தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தங்கள் நாட்டில் தூதர்கள் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளது. இதனிடையே இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை 48 மணி நேரத்துக்குள் கைது செய்ய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தூதர் மகள் கடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று பாகிஸ்தான் உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார். மேலும்,  ஒரே ஒரு வழக்கிற்காக ஆப்கானிஸ்தான் தங்கள் நாட்டு தூதரை திரும்ப அழைக்கக் கூடாது எனவும் ஷேக் ரஷீத் அகமது கூறியுள்ளார்.