மாநில செய்திகள்

போர்டு நிறுவன விவகாரம்: முதல்-அமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை + "||" + TN CM MK Stalin to Discuss About the Closure of Ford Plant in Chengalpattu

போர்டு நிறுவன விவகாரம்: முதல்-அமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை

போர்டு நிறுவன விவகாரம்: முதல்-அமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை
சென்னையை அடுத்த மறைமலைநகரில் உள்ள போர்டு கார் தயாரிப்பு தொழிற்சாலை அடுத்த ஆண்டு 2-ம் காலாண்டில் மூடப்பட உள்ளது.
சென்னை,

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ‘போர்டு' கடந்த 1995-ம் ஆண்டு இந்தியாவுக்குள் நுழைந்தது. ‘போர்டு' நிறுவனத்துக்கு இந்தியாவில் சென்னையை அடுத்த மறைமலைநகர், குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள சானந்த் ஆகிய இடங்களில் தொழிற்சாலை உள்ளது.

இந்தியாவில் வாகன உற்பத்திக்காக ‘போர்டு' நிறுவனம் சுமார் ரூ.250 கோடி முதலீடு செய்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக விற்பனை பாதிப்பு, தொடர் நஷ்டத்தால் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளை மூடுவதாக ‘போர்டு' நிறுவனம் திடீரென அறிவித்துள்ளது.

குஜராத்தில் உள்ள தொழிற்சாலையை நடப்பாண்டு 4-ம் காலாண்டிலும், சென்னையை அடுத்த மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையை அடுத்த ஆண்டு 2-ம் காலாண்டிலும் மூடுவதாக போர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் அந்நிறுவனத்தில் நிரந்தர பணியாளர்களாக உள்ள சுமார் 4 ஆயிரம் பேரும் (மறைமலைநகரில் சுமார் 2,600 பேர், குஜராத்தில் சுமார் 1,400), அந்த நிறுவனத்தை சார்ந்து இருக்கும் 40 ஆயிரம் பேரும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மறைமலைநகரில் உள்ள போர்டு நிறுவனம் வெளியேறுவது தொடர்பாக முதல்-மந்திரி மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகளுடன் முதல் மந்திரி மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்க உள்ளது. 

மறைமலைநகரில் தொழிற்சங்கத்தினருடன் போர்டு கார் தயாரிப்பு நிறுவனம் நேற்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனைக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.