தேசிய செய்திகள்

மோடி பிறந்த நாளையொட்டி ஒரே நாளில் 2¼ கோடி பேருக்கு தடுப்பூசி - கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு புதிய சாதனை + "||" + Vaccination of 2¼ crore people in a single day Federal Government New Record in Corona Prevention

மோடி பிறந்த நாளையொட்டி ஒரே நாளில் 2¼ கோடி பேருக்கு தடுப்பூசி - கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு புதிய சாதனை

மோடி பிறந்த நாளையொட்டி ஒரே நாளில் 2¼ கோடி பேருக்கு தடுப்பூசி - கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு புதிய சாதனை
மோடி பிறந்த நாளையொட்டி நேற்று ஒரே நாளில் 2¼ கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைக்கப்பட்டது.
புதுடெல்லி, 

ஆட்கொல்லி அரக்கனாக பூமிப்பந்து முழுவதையும் சுற்றி வரும் கொரோனாவை வெற்றி கொள்வதற்கு மனித குலத்திடம் இருக்கும் ஒரே ஆயுதம், தடுப்பூசி மட்டுமே.

அலைக்கு மேல் பேரலையாக சுமார் 2 ஆண்டுகளாக மக்களினத்தை தாக்கி அழித்து வரும் இந்த கண்ணுக்குத்தெரியா காலனை அழிப்பதற்கு அனைத்து நாடுகளும் தடுப்பூசியைத்தான் நம்பியிருக்கின்றன.

எனவேதான் பெருந்தொற்றின் தொடக்கம் முதலே தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கும், தயாரிப்பதற்கும் உலக நாடுகள் போட்டி போட்டன. அதில் பல நாடுகளுக்கு வெற்றியும் கிட்டியது.

கொரோனா பெருந்தொற்று, சீனாவில் முளைவிட்ட சில வாரங்களிலேயே இந்தியாவிலும் கிளைகள் பரப்பியதால், அதை சீக்கிரமே வெட்டியெறியும் முனைப்பில் மத்திய அரசு இறங்கியது.

இதற்கான ஆயுதங்களாக 2 தடுப்பூசிகள் மத்திய அரசின் கொரோனா சிறப்பு படைக்கு கிடைத்தது. அதில் ஒன்று உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘கோவேக்சின்’. மற்றொன்று ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் உருவாக்கிய ‘கோவிஷீல்டு’.

தற்போது ‘ஸ்புட்னிக் வி’ எனப்படும் ரஷிய தடுப்பூசியும் இந்த பட்டியலில் இணைந்திருக்கிறது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த தடுப்பூசிகளை கொண்டு நாடு முழுவதும் கொரோனாவை வேரறுக்கும் பணிகளை கடந்த ஜனவரி 16-ந்தேதி மத்திய அரசு தொடங்கியது. உலகின் மாபெரும் தடுப்பூசி திட்டத்தின் இந்த பணிகள், அன்றுமுதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விரிவடைந்தது.

தடுப்பூசிக்கான பயனாளிகள் பட்டியலில் சுகாதார பணியாளர்கள் முதலிடத்தை பிடித்தனர். 2-ம் இடத்தை பிடித்திருந்த முன்கள பணியாளர்கள் பிப்ரவரி 2-ந்தேதி முதல் தடுப்பூசி பெற்றனர்.

மார்ச் 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளர்களும் தடுப்பூசி போட்டு வந்தனர். அதேநேரம் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் தடுப்பூசி கிடைக்கத் தொடங்கியது.

இவ்வாறு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமாக இருந்த கொரோனா தடுப்பூசிகள், மே 1-ந்தேதி முதல் அனைவருக்குமாக விரிவாக்கப்பட்டது. அந்தவகையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்தது.

பின்னர் அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற திட்டத்துடன் ஜூன் 21-ந்தேதி முதல் இந்த தடுப்பூசி திட்டத்தை வெகுஜன இயக்கமாக மத்திய அரசு உருமாற்றியது.

அதன் பின்னர் இந்திய தடுப்பூசி திட்டத்தின் போக்கும் மாறியது. தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து மத்திய அரசே நேரடியாக தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக அளித்தது.

அதேநேரம் தடுப்பூசி உற்பத்தியாளர்களின் 25 சதவீத தயாரிப்புகளை தனியார் ஆஸ்பத்திரிகள் வாங்கிக்கொள்ளவும் அனுமதித்தது. அந்த ஆஸ்பத்திரிகள் மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக நியாயமான விலையும் நிர்ணயிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தினமும் பல லட்சங்களில் தடுப்பூசி டோஸ்கள் மக்களை சென்று சேர்ந்தன. இதனால் தடுப்பூசி பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது.

இதற்கிடையே நாட்டில் கொரோனாவின் 2-வது அலை வெறியாட்டம் போட்டது. ஆனாலும் தடுப்பூசி போடும் பணிகளில் எவ்வித தொய்வும் ஏற்படவில்லை. ஆனால் மக்களிடம் ஆர்வமும், விழிப்புணர்வும் அதிகரித்தது.

இவ்வாறு மக்களிடம் காணப்பட்ட தடுப்பூசி போடும் ஆர்வமும், அவர்களின் தேவைக்கு ஏற்ப மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுமாக தடுப்பூசி பணிகள் உச்சத்தை நோக்கி நடைபோட்டு வருகிறது.

இதனால் தினசரி போடப்படும் டோஸ் எண்ணிக்கை லட்சத்தை கடந்து கோடியை எட்டி விட்டது. அந்தவகையில் கடந்த மாதம் 27, 31 மற்றும் கடந்த 6-ந்தேதிகளில் தலா 1 கோடி டோஸ்களுக்கு மேல் போடப்பட்டு இருந்தது.

இந்த சாதனை மகுடத்தில் மற்றொரு முத்தாக, நேற்று புதிய சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது ஒரே நாளில் 2¼ கோடிக்கு மேற்பட்ட டோஸ்கள் என்ற மிகப்பெரும் சாதனையை இந்தியா எட்டியிருக்கிறது.

பிரதமர் மோடிக்கு நேற்று 71-வது பிறந்த நாள் ஆகும். அவருக்கு சிறந்ததொரு பிறந்த நாள் பரிசாக, இந்த சாதனையை நிகழ்த்த வேண்டும் என மத்திய அரசும், சுகாதாரத்துறையும் திட்டமிட்டு செயலாற்றின.

இதற்காக சிறப்பு முகாம்கள், அதிக தடுப்பூசி வினியோகம் என விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசு நிர்வாகம், இந்த சாதனையை கச்சிதமாக அரங்கேற்றி இருக்கிறது.

சுகாதாரத்துறை அதிகாரிகளின் தீவிர முயற்சி காரணமாக நேற்று மதியத்துக்கு முன்னரே 1 கோடிக்கு மேற்பட்ட டோஸ்கள் போடப்பட்டு விட்டன. மாலை 5.30 மணி நிலவரப்படி 2 கோடியே 3 லட்சத்து 68 ஆயிரத்து 343 டோஸ்கள் போடப்பட்டு இருந்தன.

இந்த தகவலை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்டு இருந்தார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘சுகாதார பணியாளர்கள் மற்றும் நாட்டு மக்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு ஒரு பரிசு அளிக்கப்பட்டு இருக்கிறது. அவரது பிறந்த நாளான இன்று (நேற்று) ஒரே நாளில் 2 கோடி தடுப்பூசி டோஸ்களை போடும் வரலாற்று சாதனையை இந்தியா கடந்து புதிய சாதனை படைத்துள்ளது’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டு இருந்தார்.

முன்னதாக பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி 2 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் போட வேண்டும் என்று நேற்று முன்தினமே அவர் அழைப்பு விடுத்திருந்தார். அதுவே பிரதமருக்கு அளிக்கும் மிகச்சிறந்த பரிசாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

மேலும் மத்திய அரசின் இந்த முயற்சிக்கு பா.ஜனதா கட்சியும் பக்கபலமாக இருந்தது. குறிப்பாக நாடு முழுவதும் அதிக அளவில் மக்கள் தடுப்பூசி போடுவதற்கு உதவ வேண்டும் என கட்சியினருக்கு பா.ஜனதா தலைமை ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி பிரதமர் மோடியின் பிறந்த நாளில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு மிகப்பெரும் மைல்கல்லை எட்டுவதற்கு பா.ஜனதாவினர் நேற்று தீவிர களப்பணி ஆற்றினர்.

நேற்று மட்டுமே 2¼ கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி போட்டதன் மூலம் இந்தியா வில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 79 கோடியை நெருங்கி விட்டது.

இந்தியாவில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 10 கோடியை எட்டுவதற்கு 85 நாட்கள் ஆனது. ஆனால் அடுத்த 45 நாட்களில் 20 கோடியை எட்டிய மொத்த எண்ணிக்கை அடுத்த 29 நாட்களில் 30 கோடியையும் கடந்தது.

40 கோடியை எட்டுவதற்கு மேலும் 24 நாட்களே எடுத்திருந்தது. ஆனால் அடுத்த 20 நாட்களில் 50 கோடியையும், மேலும் 19 நாட்களில் 60 கோடியையும் கடந்தது. பின்னர் 70 கோடி என்ற மைல் கல்லை எட்டுவதற்கு மேலும் 13 நாட்களே பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ராக்கெட் வேகத்தில் நடந்து வரும் தடுப்பூசி பணிகளால் கொரோனா அரக்கன் இந்திய மண்ணை விட்டு வெளியேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா தடுப்பூசி போடுவோருக்கு குலுக்கல் முறையில் விதவிதமான பரிசு
சென்னையில் கொரோனா தடுப்பூசி போடுவோருக்கு குலுக்கல் முறையில் விதவிதமான பரிசு வழங்கப்பட்டது. மாநகராட்சியின் கவனம் ஈர்க்கும் நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிகிறது.
2. மதுரையில் ஒரே நாளில் 82 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
மதுரையில் நேற்று 1200 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 82 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
3. 81 ஆயிரத்து 471 பேருக்கு கொரோனா தடுப்பூசி
மாவட்டத்தில் 81 ஆயிரத்து 471 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
4. 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி: இந்தியாவுக்கு, பில்கேட்ஸ் பாராட்டு
100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்காக இந்தியாவுக்கு, பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
5. கொரோனா தடுப்பூசியால் பிற வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு - அமெரிக்க ஆய்வு முடிவு
கொரோனா தடுப்பூசியால் பிற வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும் என அமெரிக்க ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.