தேசிய செய்திகள்

இங்கிலாந்து பயணிகளுக்கான கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்தியது இந்திய அரசு + "||" + Government of India relaxes restrictions on UK travelers

இங்கிலாந்து பயணிகளுக்கான கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்தியது இந்திய அரசு

இங்கிலாந்து பயணிகளுக்கான கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்தியது இந்திய அரசு
இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான கட்டுப்பாட்டு விதிகளை இந்திய அரசு தளர்த்தியுள்ளது.
புதுடெல்லி, 

வெளிநாடுகளில் இருந்து தங்கள் நாட்டிற்கு வருபவர்களுக்கான பயண கட்டுப்பாடுகளை இங்கிலாந்து கடந்த மாதம் தளர்த்தியது. ஆனால், இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வருபவர்களுக்கான கட்டுப்பாடுகள் மட்டும் தொடர்ந்து வந்தது.

அதன்படி இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்கள் சிகிச்சைக்கு செல்ல வேண்டும். கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்தால் இந்திய பயணிகள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். 

மேலும் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி விவகாரத்திலும் இருநாடுகளுக்கு இடையே கருத்துவேறுபாடு நிலவி வந்தது. இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டபோதும் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்பட வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அரசு இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் இங்கிலந்து நாட்டினர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள போதும் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை பின்பற்ற வேண்டும் எனவும் இந்தியா வரும் இங்கிலாந்து நாட்டினர் பயணம் மேற்கொள்வதற்கு 72 மணிநேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்து ‘நெகட்டிவ்’ சான்றிதல் பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்தியா வந்த உடன் இங்கிலாந்து பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலின் போது 8-வது நாளில் 2-வது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என இந்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. 

இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் தேதி இங்கிலாந்து அரசு இந்திய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்தது. அதன்படி 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட இந்திய பயணிகள் 10 நாட்கள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் இந்திய அரசும் இங்கிலாந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இதன்படி இந்தியாவிற்கு வரும் இங்கிலாந்து பயணிகளுக்கான 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுததல் உத்தரவை இந்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. மேலும் பிப்ரவரி 17, 2021 அன்று அறிவிக்கப்பட்ட சர்வதேச பயணக்கட்டுப்பாட்டு விதிகள் இனி இங்கிலாந்து பயணிகளுக்கும் பொருந்தும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய தனிமை - பிரான்ஸ் அரசு உத்தரவு
இங்கிலாந்தில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும் பயணிகளை, கட்டாய தனிமைப்படுத்துதலில் வைக்க பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.