கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்-12 சுற்று இன்று தொடக்கம் + "||" + Super 12 Ultimate Guide: Everything you need to know about the T20 World Cup group stage

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்-12 சுற்று இன்று தொடக்கம்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்-12 சுற்று இன்று தொடக்கம்
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட்டில் இன்று தொடங்கும் சூப்பர்-12 சுற்றில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
உலக கோப்பை கிரிக்கெட்

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் சுற்று நிறைவடைந்த நிலையில் ‘சூப்பர்-12’ சுற்று இன்று தொடங்குகிறது. சூப்பர்-12 சுற்றில் குரூப்-1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும், குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

சூப்பர்-12 சுற்றின் முதல் நாளான இன்று (சனிக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு அபுதாபியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் மல்லுகட்டுகின்றன.

ஆஸ்திரேலியா எப்படி?

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இதுவரை 20 ஓவர் உலக கோப்பையை வென்றதில்லை. அத்துடன் 20 ஓவர் கிரிக்கெட்டில் அவர்களின் சாதனை பெரிய அளவில் இருந்ததில்லை. உலக கோப்பைக்கு முன்பாக கடைசி 10 இருபது ஓவர் ஆட்டங்களில் 8-ல் தோல்வியை சந்தித்து இருக்கிறது. பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் ஆஸ்திரேலிய அணியை குறை சொல்ல முடியாது. ஆனால் ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லை. டேவிட் வார்னர் பார்ம் இன்றி தவிக்கிறார். ஐ.பி.எல். மற்றும் பயிற்சி ஆட்டங்களில் வார்னர் துளியும் ஜொலிக்கவில்லை. அவர் பார்முக்கு திரும்பினால் ஆஸ்திரேலியா வலுவடையும். இப்போதைக்கு மேக்ஸ்வெல், ஸ்டீவன் சுமித் ஆகியோரைத் தான் அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது.

இங்குள்ள ஆடுகளங்கள் வேகம் குறைந்தவை என்பதால் ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஜம்பா, ஆஷ்டன் அகர் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடிப்பார்கள் என்று தெரிகிறது.
தென்ஆப்பிரிக்க அணி

தென்ஆப்பிரிக்க அணியின் 20 ஓவர் கிரிக்கெட் சாதனைகளும் குறிப்பிடும்படி இல்லை. 20 ஓவர் உலக கோப்பையில் அந்த அணி இறுதிப்போட்டிக்கு கூட வந்ததில்லை. என்றாலும் கடைசி 10 சர்வதேச இருபது ஓவர் ஆட்டங்களில் 9-ல் வெற்றியும், பயிற்சி ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை தோற்கடித்ததும் அந்த அணிக்கு கூடுதல் உத்வேகம் அளித்திருக்கும். பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதம் விளாசிய வான்டெர் துஸ்சென், குயின்டான் டி காக், கேப்டன் பவுமா, மார்க்ராம் ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கை தருகிறார்கள். பந்து வீச்சில் ரபடா, நோர்டியா, உலகின் ‘நம்பர் ஒன்’ பவுலரான சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி மிரட்ட காத்திருக்கிறார்கள்.

இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் 21 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13-ல் ஆஸ்திரேலியாவும், 8-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி கண்டுள்ளன. ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் இந்த போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), வார்னர், மிட்செல் மார்ஷ், கிளைன் மேக்ஸ்வெல், ஸ்டீவன் சுமித், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க் அல்லது கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், பவுமா (கேப்டன்), மார்க்ராம், வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், வியான் முல்டர், ரபடா, கேஷவ் மகராஜ், நோர்டியா அல்லது நிகிடி, ஷம்சி.

மற்றொரு ஆட்டம்

இரவு 7.30 மணிக்கு துபாயில் அரங்கேறும் மற்றொரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்' அணியான இங்கிலாந்து, இரண்டு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது.

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டு உள்ள இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர், ஜானிபேர்ஸ்டோ, ஜாசன் ராய், டேவிட் மலான் என்று அதிரடி சூரர்களுக்கு பஞ்சமில்லை. கேப்டன் இயான் மோர்கனும் தடாலடி பேட்ஸ்மேன் தான். ஆனால் அண்மை காலமாக ரன் எடுக்க தடுமாறும் அவர் பழைய நிலைக்கு திரும்பினால் இங்கிலாந்து அசுர பலம் நிறைந்ததாக மாறும்.

நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் அடியெடுத்து வைக்கும் வெஸ்ட் இண்டீசை எடுத்துக் கொண்டால் அந்த அணியில் கிறிஸ் கெய்ல், இவின் லீவிஸ், ஆந்த்ரே ரஸ்செல், வெய்ன் பிராவோ, நிகோலஸ் பூரன், கேப்டன் பொல்லார்ட், ஹெட்மயர் என்று ஒவ்வொருவரும் கவனிக்கத்தக்க வீரர்கள் தான். இவர்களின் ஆட்டம் ஒரு சேர ‘கிளிக்’ ஆனால் வெஸ்ட் இண்டீஸ் நிச்சயம் அபாயகரமான அணி தான். ஆனால் அவ்வாறு ஆடாதது தான் அவர்களின் பிரச்சினையாக இருக்கிறது. அந்த அணியில் பெரும்பாலான வீரர்கள் சமீபத்தில் இதே மைதானத்தில் ஐ.பி.எல். போட்டியில் விளையாடி உள்ளனர். அந்த அனுபவம் அவர்களுக்கு அனுகூலமாக இருக்கக்கூடும். 42 வயதான கிறிஸ் கெய்ல், இதுவரை நடந்துள்ள ஆறு உலக கோப்பை போட்டியிலும் விளையாடிய வீரர்களில் ஒருவர். கடந்த 2 ஆண்டுகளில் 16 ஆட்டங்களில் 227 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள கெய்ல், சிக்சர் மழை பொழிந்தால் வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் ஏற்றம் காணும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் கிரிக்கெட்டில் 18 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் 7-ல் இங்கிலாந்தும், 11-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி கண்டன. ஆனால் 20 ஓவர் உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்திடம் ஒரு போதும் தோற்றதில்லை. சந்தித்த 5 முறையும் போட்டுத் தாக்கியுள்ளது. இதில் 2016-ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதும் அடங்கும். அதே ஆதிக்கத்தை இப்போது பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ள இங்கிலாந்திடம் நீடிக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

வீரர்கள் விவரம்

இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், பேர்ஸ்டோ, மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டன், மோர்கன் (கேப்டன்), டேவிட் வில்லி அல்லது கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், மார்க்வுட், டைமல் மில்ஸ்.

வெஸ்ட் இண்டீஸ்: இவின் லீவிஸ், லென்டில் சிமோன்ஸ், கெய்ல், நிகோலஸ் பூரன், ஹெட்மயர், பொல்லார்ட் (கேப்டன்), ஆந்த்ரே ரஸ்செல், வெய்ன் பிராவோ, அகேல் ஹூசைன் அல்லது ஹைடன் வால்ஷ், ஒபேட் மெக்காய், ஒஷானே தாமஸ் அல்லது ரவி ராம்பால்.

இவ்விரு ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. டி20 உலகக்கோப்பை அரை-இறுதிப் போட்டி; இங்கிலாந்து 166 ரன்கள் குவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை-இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி 166 ரன்கள் எடுத்துள்ளது.
2. டி20 உலகக்கோப்பை: அரை-இறுதியில் நியூசிலாந்து முதலில் பந்துவீச்சு தேர்வு!
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதி போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
3. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
4. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
5. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு
16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை நடக்கிறது.