மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு கூடுதல் தளர்வுகள் என்னென்ன? முழு விவரம் + "||" + Tamil Nadu Lockdown Extended, With Relaxation. Ban On Festivals Continues

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு கூடுதல் தளர்வுகள் என்னென்ன? முழு விவரம்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு கூடுதல் தளர்வுகள் என்னென்ன? முழு விவரம்
திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும் என முதல் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகளின் விவரம் வருமாறு;- 

*பண்டிகை காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பொருட்கள் வாங்குவதற்காக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11 மணிவரை மட்டும் செயல்பட விதிக்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படுகிறது.

அதே போன்று, அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில், பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படுகிறது. சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது.

மேலும், பின்வரும் செயல்பாடுகளுக்கு 1-11-2021 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. அதாவது, அனைத்து பள்ளிகளிலும், 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். திரையரங்குகள் 100 சதவீதம் பார்வையாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

கூட்ட அரங்குகளில், அனைத்து வகையான கலாசார நிகழ்வுகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன் (பார்கள்) அனைத்து வகை தனித்து இயங்கும் மதுக்கூடங்களும், செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், மாநிலங்களுக்கிடையேயும் (கேரளா தவிர) சாதாரண மற்றும் குளிர் சாதன பொது பேருந்து போக்குவரத்து, 100 சதவீதம் இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம், பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் போன்ற அரசு பயிற்சி நிலையங்கள் / மையங்கள் 100 சதவீதம் பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள் / கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது. பங்குபெறும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும்.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும். திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும். முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க உதவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முககவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

கடைகளின் நுழைவு வாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும். நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளாக, நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த்தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டங்களில், வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பின், அங்கு நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். அதாவது, நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நவம்பர் 30 வரை நீட்டிப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகளை நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
2. நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம்
நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
3. கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் : மத்திய அரசு
பண்டிகை காலம் வரவிருப்பதால் கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. கர்நாடகாவில் மத வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி
பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கவும் அனுமதி அளித்து கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
5. இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன
இங்கிலாந்தில் திங்கள் கிழமை முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.