“தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது” - தமிழிசை சவுந்தரராஜன்


“தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது” - தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 9 Nov 2021 7:39 AM GMT (Updated: 9 Nov 2021 7:39 AM GMT)

தமிழகத்தில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாக புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் வங்க கடலில் இன்று உருவாகும் தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 10-ந் தேதி (நாளை), 11-ந் தேதியில் (நாளை மறுதினம்) சில இடங்களில் கன முதல் அதி கன மழையும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், “தமிழகத்தில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது” என புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-

“தமிழகத்தில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழை காலங்களில் நோய் தொற்று பரவ வாய்ப்பிருப்பதால் நீரை காய்ச்சி குடிக்க வேண்டும். மின் சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டுகிறேன்.

மேலும் என் தொடர்புடையவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி வேண்டியவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளேன். இந்த சூழ்நிலையில் மக்கள் தொண்டாற்றும் ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story