என் தாய்மொழியை விட நான் இந்தியை அதிகமாக நேசிக்கிறேன்: அமித்ஷா


என் தாய்மொழியை விட நான் இந்தியை அதிகமாக நேசிக்கிறேன்: அமித்ஷா
x
தினத்தந்தி 13 Nov 2021 5:37 PM GMT (Updated: 13 Nov 2021 5:37 PM GMT)

என் தாய்மொழியை விட நான் இந்தியை அதிகமாக நேசிக்கிறேன் என்று ஆட்சி மொழி மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.

உ.பி.யில் அமித்ஷா

பா.ஜ.க. ஆட்சி நடக்கிற, நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் அந்த மாநிலத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

வாரணாசியில் அவர் அகில இந்திய ஆட்சி மொழி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எந்தவொரு நாட்டால், தனது மொழிகளை பாதுகாக்க முடியவில்லையோ, அந்த நாட்டால் தனது கலாசாரத்தை பாதுகாக்க முடியாது. இந்தியாவின் அனைத்து மொழிகளையும் பாதுகாப்பதும், வளர்ப்பதும் ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியம்.

‘இந்தியை அதிகமாக நேசிக்கிறேன்’

நான் ஒரு குஜராத்தி. ஆனால் என் தாய்மொழியை விட நான் இந்தியை அதிகமாக நேசிக்கிறேன். இந்தியாவின் வளம், நமது உள்நாட்டு மொழிகளின் வளத்தில்தான் அடங்கிஇருக்கிறது.

ஆங்கில மொழியில் பேச முடியாத சில குழந்தைகளின் மனங்களில் தாழ்வு மனப்பான்மை விதைக்கப்பட்டுள்ளது. ஆனால் தாய்மொழியில் பேச இயலாதவர்கள் தாழ்வு மனப்பான்மை அடையும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பது எனது உறுதியான நம்பிக்கை.

தாய்மொழியில் பேசுவது பெருமிதம்

நாட்டின் மக்கள் எப்போது முடிவு செய்து, உள்நாட்டு மொழிகள் ஆட்சிமொழிகளாக மாறுகின்றனவோ அப்போது இந்தியா தானாகவே மகரிஷி பாதாஞ்சலி மற்றும் பாணினி ஆகியோரின் அறிவாற்றலைப் பெறும். ஆங்கிலேயர் ஆட்சியில் விதைக்கப்பட்ட தாழ்வு மனப்பான்மையை இளைஞர்களின் மனங்களில் இருந்து விடுவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்கள் தாய்மொழியில் பேசுவதைப் பெருமிதமாகக் கொள்ள வேண்டிய சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும். இந்தி மொழியை வைத்து ஏராளமான சர்ச்சைகள் உருவாக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் அந்தத் தருணம் எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது.

‘ஒரு கோப்பு கூட ஆங்கிலத்தில் கிடையாது’

உள்துறை அமைச்சகத்தில் ஒரு கோப்பு கூட ஆங்கிலத்தில் எழுதப்படுவதில்லை என்பதை இன்றைக்கு நான் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன். நாங்கள் இந்தியை ஆட்சிமொழியாக முற்றிலுமாய் பின்பற்றி வருகிறோம்.

இந்திக்கும், பிற இந்திய மொழிகளுக்கும் இடையே வேறுபாடுகள் இல்லை. இந்தி அனைத்து மொழிகளுக்கும் நண்பர். நண்பர்களுக்கு இடையே வேறுபாடுகள் கூடாது.

இந்தியா சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடுகிறபோது, உள்நாட்டு மொழிகளும், ஆட்சி மொழியும் ஒரு அயல்மொழியின் உதவியை நாம் நாடாத வகையில் மிகுந்த வலிமை பெற ணே்டும் என்ற உறுதிமொழியை இந்தி மொழி ஆர்வலர்கள் இந்த ஆண்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.

சுதந்திரத்தின் தூண்கள் 3 உண்டு. அவை, சுயராஜ்யம், உள்நாட்டுப்பொருட்கள், உள்நாட்டு மொழிகள் ஆகும். நாம் சுயராஜ்யத்தை அடைந்து விட்டோம். ஆனால் உள்நாட்டுப்பொருட்களும், உள்நாட்டு மொழிகளும் பின்தங்கி விட்டன.

பின்தங்கிவிட்ட உள்நாட்டுப்பொருட்கள் பயன்பாட்டையும், உள்நாட்டு மொழிகளின் வளர்ச்சியையும் உறுதி செய்ய பிரதமர் மோடி நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

அசம்காரில் நடந்த விழாவில் அசம்கார் மாநில பல்கலைக்கழகத்துக்கு உள்துறை மந்திரி அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.

Next Story