மாநில செய்திகள்

ஜெய்பீம் பட விவகாரம்: சூர்யாவுடன் நிற்பது நமது கடமை - ஜோதிமணி எம்.பி. + "||" + It is our duty to stand with Surya - Karur MP Jothimani

ஜெய்பீம் பட விவகாரம்: சூர்யாவுடன் நிற்பது நமது கடமை - ஜோதிமணி எம்.பி.

ஜெய்பீம் பட விவகாரம்: சூர்யாவுடன் நிற்பது நமது கடமை - ஜோதிமணி எம்.பி.
தனிநபரோ, அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ கலைஞனை அச்சுறுத்த முடியாது. அச்சுறுத்தவும் கூடாது. அவர்களை அச்சுறுத்துவது ஆபத்தானது என கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'. 

படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும் சர்ச்சையாயின. இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. ஜெய்பீம் திரைப்படத்தில் குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்திருந்த பெயர் மற்றும் குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளம் இடம்பெற்றது போன்றவை தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தது. இதை தொடர்ந்து அந்த காட்சி நீக்கப்பட்டது. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

மேலும், வன்னியர் சங்கம் சார்பில் சூர்யா, ஜோதிகா, டைரக்டர் ஞானவேல் ஆகியோருக்கு, 7 நாட்களுக்குள் 5 கோடி ரூபாய் அபராதம் வழங்க வேண்டும். வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும். 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும்’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில்,  கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கலைஞர்களை அச்சுறுத்துவது ஆபத்தானது. இதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. இந்த நேரத்தில் சூர்யா மற்றும் ஜெய்பீம் படக்குழுவினரோடு நிற்பது நமது கடமை என சூர்யாவிற்கு ஆதரவாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'ஜெய்பீம் மனசாட்சியை உலுக்கும் ஒரு மகத்தான திரைக்காவியம். சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஒரு சமூக அநீதியை காட்சிப்படுத்தியிருக்கும் விதம், அப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஆட்சியாளர் உள்ளிட்ட பலரையும் செயல்பட தூண்டியிருப்பதில் உள்ளது, அதன் மாபெரும் வெற்றி.

ஒரு கலைப்படைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும் அல்லது இருக்கக்கூடாது என்கிற விதியை யாரும் வகுக்க முடியாது. அது ஒரு படைப்பாளியின் சுதந்திரம். என்றபோதிலும் அதை கையாள்வதற்கு அரசு அமைப்புகளும் உள்ளன. தனிநபரோ, அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ கலைஞனை அச்சுறுத்த முடியாது. அச்சுறுத்தவும் கூடாது.

ஒரு கலைப்படைப்பின் நோக்கம் காட்சிப்படுத்துதலே. அதை தாண்டியும் ஒரு படைப்பு தாக்கத்தை ஏற்படுத்தும்போது அது மகத்தான படைப்பாக மாறுகிறது. கொண்டாடப்படுகிறது. இப்படியொரு படைப்பை உருவாக்கியவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். அவர்களை அச்சுறுத்துவது ஆபத்தானது. இதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.

அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் தங்கள் எல்லைகளையும், பொறுப்புகளையும் உணர்ந்து செயல்படவேண்டும். என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலையிலிருந்து வெளியில் வரவேண்டும். இன்றைய சமூகம் நம்மிடமிருந்து ஆக்கப்பூர்வமான பங்களிப்பையே எதிர்பார்க்கிறது.

அரசியலின் பெயரால் இம்மாதிரியான அச்சுறுத்தல்களில் ஈடுபடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் முடிந்துவிட்டது. திரு. சூர்யாவை  அச்சுறுத்துவதை  எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கலைபடைப்புகளை ஒரு சமூகமாக நாம் திறந்தமனதோடு எதிர்கொள்ளவெண்டும். நல்ல படைப்புகளை ஊக்குவிக்கவேண்டும்.

இந்த நேரத்தில் சூர்யா மற்றும் ஜெய்பீம் படக்குழுவினரோடு நிற்பது நமது கடமை'. என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெறுப்புணர்வை வீழ்த்த தேர்தலே சரியான தருணம்: ராகுல்காந்தி
வட மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு.
2. போலி அறிக்கை... வழக்கு தொடரும் சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தனது பெயரில் வெளியான போலியான அறிக்கைக்கு வழக்கு தொடர இருக்கிறார்.
3. "இளமை இதோ இதோ..." - இணையத்தில் டிரெண்டாகும் இளையராஜாவின் வீடியோ
இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4. 5 மொழிகளில் மாஸ் காட்ட வரும் சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, 5 மொழிகளில் மாஸ் காட்ட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
5. நடிகை ராதிகாவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது!
நடிகை ராதிகா கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் மரத்தின் படத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.