தொழிலாளி கொலை வழக்கு: தி.மு.க. எம்.பி.க்கு ஜாமீன் கிடைக்குமா? - ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு


தொழிலாளி கொலை வழக்கு: தி.மு.க. எம்.பி.க்கு ஜாமீன் கிடைக்குமா? - ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு
x
தினத்தந்தி 18 Nov 2021 9:29 PM GMT (Updated: 18 Nov 2021 9:29 PM GMT)

தொழிலாளி கொலை வழக்கில் தி.மு.க., எம்.பி. ரமேஷ் ஜாமீன் மனு மீது ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கிறது. அப்போது அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என தெரியும்.

சென்னை, 

கடலூர் தி.மு.க., எம்.பி., டி.ஆர்.வி.எஸ்.ரமேசுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் வேலை செய்த கோவிந்தராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில், தி.மு.க., எம்.பி., ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது ஜாமீன் மனு, சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணையில் உள்ளது. இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோவிந்தராஜின் மகன் தரப்பில் ஆஜரான வக்கீல் கே.பாலு, “இந்த வழக்கை விசாரணை அதிகாரி நியாயமாக விசாரிக்கவில்லை. பூனைக்கும் காவல், பாலுக்கும் காவல் என்ற அடிப்படையில் விசாரணை நடப்பதால், விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்” என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் தரப்பில் ஆஜரான தமிழக அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா கூறியதாவது:-

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நியாயமாகவும், நேர்மையாகவும் விசாரித்து வருகின்றனர். தி.மு.க., எம்.பி. என்பதற்காக எந்த சலுகையும் காட்டப்படவில்லை. பாதுகாப்பு காரணமாக மனுதாரர் ரமேஷ் கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது அவருக்கு காட்டும் சலுகை அல்ல.

ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்ற போலீசார், 3 மணி நேரம் மட்டுமே அவரிடம் விசாரணை நடத்தினர் என்று கோவிந்தராஜின் மகன் தரப்பு வக்கீல் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக அவர் காயம் அடைந்து இருந்தார். வலியை தாங்க முடியாத நிலையில் இருந்ததால், அவரை ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர்.

இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றத் தேவையில்லை. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றியதே தமிழக அரசுதான். பாதிக்கப்பட்டவர்கள் இது சம்பந்தமாக கோரிக்கை விடுக்க வில்லை. கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜ் தரப்பினர், 5 பேர் மீது மட்டுமே குற்றம் சாட்டினர். ஆனால், சி.பி. சி.ஐ.டி., போலீசார் நேர்மையாக விசாரித்து, 6 பேரை கைது செய்துள்ளனர். புலன் விசாரணை அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். புதிய அதிகாரியாக இன்ஸ்பெக்டர் சுந்தரராஜனை டி.ஜி.பி., நியமித்துள்ளார்.

இவ்வாறு அவர் வாதிட்டார். இதையடுத்து, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story