இந்தியா-சீனா இருதரப்பு உறவு மோசமான பாதையில் செல்கிறது - ஜெய்சங்கர் கருத்து


இந்தியா-சீனா இருதரப்பு உறவு மோசமான பாதையில் செல்கிறது - ஜெய்சங்கர் கருத்து
x
தினத்தந்தி 19 Nov 2021 11:09 PM GMT (Updated: 19 Nov 2021 11:09 PM GMT)

இந்தியாவும், சீனாவும் இருதரப்பு உறவுகளில் மோசமான பாதையில் செல்வதாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர், 

லடாக் மோதலால் இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்ட பதற்றம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அங்கு இருதரப்பு படைகளையும் முற்றிலும் வாபஸ் பெறுவது தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்பட்டும் இதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. 

இந்த நிலையில் இந்தியாவும், சீனாவும் இருதரப்பு உறவுகளில் மோசமான பாதையில் செல்வதாக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார். சிங்கப்பூரில் நடந்த புளூம்பெர்க் புதிய பொருளாதார மன்ற நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இதை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘எங்கள் (இந்தியா-சீனா) உறவில் நாங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம். ஏனென்றால் ஒப்பந்தங்களை மீறிய செயல்களுக்கு அவர்கள் (சீனா) இன்னும் நம்பத்தகுந்த விளக்கத்தைக் கொடுக்கவில்லை’ என்று தெரிவித்தார். இதற்கிடையே இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 14-வது சுற்று பேச்சுவார்த்தையை விரைவில் நடத்துவது என இந்தியாவும், சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Next Story