மழை பாதிப்பு: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மத்திய குழு இன்று ஆய்வு...!


மழை பாதிப்பு: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மத்திய குழு இன்று ஆய்வு...!
x
தினத்தந்தி 21 Nov 2021 11:09 PM GMT (Updated: 22 Nov 2021 1:02 AM GMT)

மழை சேதங்கள் குறித்து கணக்கிட தமிழகம் வந்த மத்திய குழுவினர் தலைமைச்செயலாளருடன் நேற்று ஆலோசனை நடத்தினர். சென்னை, கன்னியாகுமரி உள்பட 4 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 2 குழுக்களாக சென்று இன்று ஆய்வு செய்கின்றனர்.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கியதையடுத்து பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்தது.

இதேபோல விழுப்புரம், கன்னியாகுமரி, திருவண்ணாமலை உள்பட பல மாவட்டங்களிலும் அதிக மழை பெய்தது. கன மழையால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் மூழ்கின. கன மழையால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்கு மத்திய குழுவினை அனுப்பி வைக்கவேண்டும் என்றும், முதல் கட்ட வெள்ள நிவாரணமாக ரூ.2 ஆயிரத்து 79 கோடி வழங்கவேண்டும் என்றும், இதில் ரூ.550 கோடியை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

7 பேர் குழு

இதன்பேரில் மத்திய அரசு உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில், மத்திய நிதித்துறை செலவின பிரிவு ஆலோசகர் ஆர்.பி.கவுல், மத்திய வேளாண்மைத்துறை (ஐ.டி.) பிரிவு இயக்குனர் விஜய் ராஜ்மோகன், மத்திய நீர்வள அமைச்சகத்தின் இயக்குனர் ஆர்.தங்கமணி, மத்திய எரிசக்தித்துறை உதவி இயக்குனர் பாவ்யா பாண்டே, சென்னையில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மண்டல அதிகாரி ரணஞ்செய் சிங், மத்திய ஊரக வளர்ச்சித்துறை சார்பு செயலர் எம்.வி.என்.வரப்பிரசாத் ஆகியோர் அடங்கிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

தமிழகம் வருகை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழுவினர் நேற்று பிற்பகல் சென்னை வந்தனர். அந்த குழுவினர் மாலை 3.30 மணிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் தலைமைச்செயலாளர் இறையன்பு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாகவும், சென்னையிலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் போன்ற புள்ளி விவரங்கள் அடங்கிய விளக்கக்காட்சிகள் மூலம் தகவல்களை மத்திய குழுவினருக்கு, தமிழக அதிகாரிகள் எடுத்து கூறினார்.

இந்த கூட்டத்தில் 12-க்கும் மேற்பட்ட துறைகளின் முதன்மைச்செயலாளர்கள் கலந்து கொண்டு மழையால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான தகவல்களை அளித்தனர்.

ஆலோசனை

தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து வைக்கப்பட்டு இருந்த புகைப்பட கண்காட்சியினை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். பின்னர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக கமிஷனர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு முதன்மைச்செயலாளர் குமார் ஜெயந்த், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் சி.விஜயராஜ்குமார் உள்பட அதிகாரிகளுடன், மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து வெளியே வந்த ராஜீவ் சர்மா நிருபர்களிடம் கூறுகையில், “மழையால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக தலைமைச்செயலாளர் உள்ள மாநில அரசின் மூத்த அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினோம். அடுத்த 2 நாட்களுக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இருக்கிறோம். சேதங்களை கணக்கீடு செய்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறோம்” என்றார்.

2 பிரிவாக சென்று ஆய்வு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் 2 பிரிவாக பிரிந்து சென்று இன்றும், நாளையும் ஆய்வு செய்ய உள்ளனர். ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவில் விஜய் ராஜ்மோகன், ரணஞ்செய் சிங் மற்றும் எம்.வி.என்.வரப்பிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவுக்கு ஒருங்கிணைப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக கமிஷனர் கே.பணீந்திர ரெட்டியும், தொடர்பு அதிகாரியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் பொதுமேலாளர் என்.சுரேஷ் இருப்பார்.

ஆர்.பி.கவுல் தலைமையிலான குழுவில் ஆர்.தங்கமணி, பாவ்யா பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவுக்கு ஒருங்கிணைப்பு அதிகாரியாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச்செயலாளர் குமார் ஜெயந்த், தொடர்பு அதிகாரியாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை இயக்குனர் எஸ்.வெங்கடேஷ் இருப்பார்.

4 மாவட்டங்களில்...

ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு புறப்பட்டு செல்கின்றனர். 3 மாவட்டங்களிலும் மழை பாதிப்புகளை பார்வையிட்டுவிட்டு, மாமல்லபுரத்தில் மதிய உணவு சாப்பிடுகின்றனர். பின்னர் அங்கிருந்து புதுச்சேரி புறப்பட்டு செல்கின்றனர். புதுச்சேரியில் சேத விவரங்களை ஆய்வு செய்த பின்னர், இரவு அங்கேயே தங்குகிறார்கள்.

இதேபோல ஆர்.பி.கவுல் தலைமையிலான மற்றொரு குழுவினர் விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி சென்று அங்கிருந்து இருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி செல்கிறார்கள். பகல் 2 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகின்றனர்.

டெல்டா மாவட்டங்கள்...

நாளை (23-ந்தேதி) ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர் காலை 10 மணிக்கு புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு செல்கிறார்கள். கடலூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்கள். இதையடுத்து அந்த குழுவினர் மயிலாடுதுறை மாவட்டத்தில் சேதமான பகுதிகளை ஆய்வு செய்கிறார்கள். பின்னர் நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் சேத விவரங்களை பார்வையிடுகிறார்கள். தொடர்ந்து அங்கிருந்து திருச்சி சென்று அங்கிருந்து சென்னை புறப்படுகிறார்கள்.

இதேபோல நாளைஆர்.பி.கவுல் தலைமையிலான குழுவினர் தூத்துக்குடியில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு விமானம் மூலம் சென்னை வருகிறார்கள். சென்னையில் இருந்து அவர்கள் வேலூர் சென்று வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் சேத பகுதிகளை பார்வையிடுகிறார்கள்.

மு.க.ஸ்டாலின் உடன் சந்திப்பு

24-ந்தேதி மத்திய குழுவினர் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்கள். தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தாங்கள் ஆய்வு செய்தது குறித்து விளக்கிவிட்டு, தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிகிறார்கள். இதையடுத்து மாலை 4.15 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள்.

Next Story