அதிக சர்வதேச விமான நிலையங்களை கொண்ட மாநிலமாகிறது உத்தரப்பிரதேசம்...!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Nov 2021 8:30 PM GMT (Updated: 22 Nov 2021 8:30 PM GMT)

உத்தரபிரதேசத்தில் 2012 வரை லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன.

லக்னோ,

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான சர்வதேச விமான நிலையங்களை உத்தரபிரதேசம் பெற உள்ளது. 

உத்தரப் பிரதேசத்தில் 2012 வரை லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. குஷிநகரில் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் அக்டோபர் 20 அன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பிறகு செயல்பாட்டுக்கு வந்தது. அதே நேரத்தில் அயோத்தியில் விமான நிலையத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ஐந்தாவது சர்வதேச விமான நிலையமானது நொய்டாவிற்கு அருகிலுள்ள ஜெவாரில் வர உள்ளது. இந்த விமானநிலையமும் கட்டமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், நாட்டில் அதிக சர்வதேச விமான நிலையங்களை கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசம் இருக்கும்.

வருகிற நவம்பர் 25 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, ஜெவாரில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலைய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில் மாநிலம் தற்போது ஐந்து சர்வதேச விமான நிலையங்களை உருவாக்குவதற்கான பாதையில் உள்ளது. இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாதது என்று பாஜக தலைமையிலான மாநில அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Next Story