உத்தரபிரதேசத்தில் 35 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள்..!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Nov 2021 11:31 PM GMT (Updated: 23 Nov 2021 11:31 PM GMT)

உத்தரபிரதேசத்தில் 35 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லக்னோ, 

மொத்தம் 403 இடங்களை கொண்ட உத்தரபிரதேச சட்டசபையின் நடப்பு 396 எம்.எல்.ஏ.க்களின் நிதிநிலை, குற்ற வழக்கு பின்னணி மற்றும் பிற விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. உத்தரபிரதேச தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, நடப்பு எம்.எல்.ஏ.க்கள் 140 பேர் மீது, அதாவது 35 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதேபோல 27 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது தீவிரமான குற்ற வழக்குகள் இருக்கின்றன.

கட்சிவாரியாக பார்த்தால், பா.ஜ.க.வின் 304 எம்.எல்.ஏ.க்களில் 106 பேர் மீதும், சமாஜ்வாடி கட்சியின் 18, பகுஜன் சமாஜ் கட்சியின் 2, காங்கிரஸ் கட்சியின் 1 எம்.எல்.ஏ. மீதும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உத்தரபிரதேச சட்டசபையில் 313 எம்.எல்.ஏ.க்கள் அதாவது 79 சதவீத எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்களாக உள்ள தகவலும் வெளியாகி இருக்கிறது.

அதில் பா.ஜ.க.வில் அதிகபட்சமாக 235 எம்.எல்.ஏ.க்களும், 2-வது இடத்தில் உள்ள சமாஜ்வாடி கட்சியில் 42 எம்.எல்.ஏ.க்களும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதிக கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சிகளின் பட்டியலில் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகியவை அடுத்த இடங்களில் உள்ளன.

Next Story