கூலி பாக்கியை கேட்ட கட்டிடத்தொழிலாளி - கையை துண்டாக வெட்டிய முதலாளி


கூலி பாக்கியை கேட்ட கட்டிடத்தொழிலாளி - கையை துண்டாக வெட்டிய முதலாளி
x
தினத்தந்தி 24 Nov 2021 8:37 AM GMT (Updated: 24 Nov 2021 8:37 AM GMT)

கூலி பாக்கியை கேட்ட கட்டிடத்தொழிலாளியின் கையை முதலாளி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் ரிவா மாவட்டம் பத்ரி கிராமத்தை சேர்ந்தவர் அசோக் சகெட் (45). கட்டிடத்தொழிலாளியினான இவர் கணேஷ் மிஸ்ரா என்பவரிடம் வேலை செய்துவந்துள்ளார்.

இதற்கிடையில், கட்டிட வேலை செய்ததற்கான கூலித்தொகையை அசோக் சகெட்டிற்கு கொடுப்பதில் முதலாளியான கணேஷ் மிஸ்ரா கால தாமதம் செய்துள்ளார். இதனால், முதலாளிக்கும், தொழிலாளிக்கும் இடையே மோதல் நிலவி வந்துள்ளது.

இந்நிலையில், கூலி பாக்கி தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வுகான அசோக் சக தொழிலாளர்களுடன் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் முதலாளியான கணேஷ் மிஸ்ராவை சந்தித்துள்ளார்.

அப்போது, கணேஷ் மிஸ்ராவுக்கும் அசோக்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கணேஷ் மிஸ்ரா தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அசோக்கின் கையை வெட்டினார். இதில் அசோக்கின் கை துண்டானது. இதனால், அசோக் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சக தொழிலாளிகள் அசோக் மற்றும் அவரின் வெட்டப்பட்ட கையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்கு பின்னர் அசோக்கின் வெட்டப்பட்ட கை மீண்டும் பொறுத்தப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷ் மிஸ்ரா அவரது சகோதரர்கள் ரத்னேஷ் மிஸ்ரா, கிருஷ்ண குமார் மிஸ்ரா ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Next Story