கொரோனா பரிசோதனை விகிதம் சரிவு: 13 -மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்


கொரோனா பரிசோதனை விகிதம் சரிவு: 13 -மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
x
தினத்தந்தி 24 Nov 2021 11:37 AM GMT (Updated: 24 Nov 2021 11:37 AM GMT)

கொரோனா பரிசோதனை விகிதம் குறைந்து இருப்பதாக கவலை தெரிவித்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  9 ஆயிரமாக குறைந்துள்ளது. தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மக்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது. 

இந்த நிலையில், கொரோனா பரிசோதனை விகிதம் குறைந்து இருப்பதாக கவலை தெரிவித்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.  மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், நாகலந்து, சிக்கிம், மராட்டியம், கேரளா, கோவா, மணிப்பூர், மேகலயா, மிசோரம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், லடாக், ஆகிய மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அந்தக் கடிதத்தில், சமீப காலமாக பண்டிகைகள் மற்றும் விடுமுறை, திருமணம் போன்ற நிகழ்வுகளால் மக்கள் பயணம் செய்வது அதிகரித்துள்ளது. ஆகவே, கொரோனா பரிசோதனையை அதிகமாக தொடர்ந்து செய்ய வேண்டும். பரிசோதனைகளை குறைத்தால் சமூகத்தில் தொற்று பரவல் இருப்பது  குறைவாக மதிப்பிடப்படும். குளிர்காலம் மற்றும் சில மாநிலங்களில் காற்று மாசு அதிகரிப்பால்  சுவாசக் கோளாறு அறிகுறிகளையும்  உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.  போதுமான அளவு சோதனைகள் இல்லாத நிலையில்,  குறிப்பிட்ட இடங்களில் பரவும் நோய்த்தொற்றின் உண்மையான அளவைக் கண்டறிவது மிகவும் கடினம்.  

சமீப காலங்களில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு அடிக்கடி அதிகரித்து வருகிறது. சில வளர்ந்த நாடுகளில் அதிக அளவு தடுப்பூசி செலுத்தியும் கூட  நான்காவது மற்றும் ஐந்தாவது அலை பரவல் அதிகரித்துள்ளது. ஆகவே, நோயின் கணிக்க முடியாத மற்றும் தொற்றக்கூடிய தன்மையைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, தொற்று பரவல் மோசமான நிலைக்கு செல்லாமல் தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story