மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தமிழ் ஆசிரியர்; உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியையும் கைது


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தமிழ் ஆசிரியர்; உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியையும் கைது
x
தினத்தந்தி 24 Nov 2021 12:30 PM GMT (Updated: 24 Nov 2021 12:30 PM GMT)

அரியலூர் அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தமிழ் ஆசிரியர் அருள் செல்வன் (35) கைது செய்யப்பட்டார்.

அரியலூர்,

அரியலூர் அருகே உள்ள காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றுபவர் தமிழாசிரியர் அருள்செல்வன் (வயது 35).  அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவியிடம் அருள்செல்வன், பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் பல மாணவகளிடமும் மற்றும் பயிற்சி ஆசிரியைகளுக்கும் அவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஆசிரியரின் தவறான நடத்தைக் குறித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தார்கள். ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர் மீது எந்தவித நடவடிக்கையுமே எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு இன்று பெற்றோர்கள் மறியல் செய்தனர்.

தகவலறிந்து பள்ளிக்கு வந்த அரியலூர் காவல்துறையினர்,  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன், தமிழாசிரியர் அருள்செல்வனை காவல்நிலையம் அழைத்து சென்று செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதோடு, பள்ளியில் யார், யாரிடம் பாலியல் ரீதியான தொந்தரவை அவர் மேற்கொண்டார் என்ற விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. 

தமிழ் ஆசிரியர் அருள்செல்வன் மீதான விசாரணையை துரிதமாக நடத்தி அவர் மீது, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள்  கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் காவல் நிலையத்தில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையிலும் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையிலும் தமிழாசிரியர் அருள்செல்வனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மேலும், அருள் செல்வன் மீது புகார் தெரிவித்த போது நடவடிக்கை எடுக்காமல் இருந்த தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியையும் அரியலூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தை வெளியில் சொல்லக்கூடாது என்றும் மாணவ-மாணவிகளையும், பெற்றோரையும் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி எச்சரித்ததாக கூறப்படுவதால், குற்றத்திற்கு துணை போன குற்றச்சாட்டில் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story