கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் : கேரளாவில் யானைகள் உயிரிழப்பு அதிகரிப்பு


கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் : கேரளாவில் யானைகள் உயிரிழப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 24 Nov 2021 1:44 PM GMT (Updated: 24 Nov 2021 4:17 PM GMT)

நவம்பர் 2018 ஆம் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பில் கேரளாவில் 519 யானைகள் இருந்துள்ளன .தற்போது அந்த எண்ணிக்கை 453 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொச்சி ,

கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக கேரளாவில் யானைகள் உயிரிழப்பு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது .

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்று மிக வேகமாக பரவியது. இதனால் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.தொற்றின் வேகம் தற்போது கட்டுக்குள் வந்து இருந்தாலும் இன்னும் பல மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

அதே போல் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளாவும் ஒன்று . தற்போது நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்து இருந்தாலும்  கேரள மாநிலத்தில் அவ்வப்போது தொற்றின் பாதிப்பு கூடுகிறது. இதனால் அம்மாநிலத்தில் சற்று கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் காரணமாக அந்த மாநிலத்தில் யானைகள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஊரடங்கு அமலில் இல்லாத நேரங்களில் அதன் உரிமையாளர்கள் யானைகளை உடற்பயிற்சிக்காக நடைபயணம் அழைத்து செல்வர். தற்போது அது சாத்தியமில்லாத காரணத்தால் யானைகளின் உடல்நலன் பாதிக்கப்படுகிறது.

இது குறித்து கேரளா கால்நடை  மருத்துவர் ஒருவர் கூறியதாவது :

கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில் மற்றும் கிறித்துவ ஆலயங்களில் விழாக்கள் நடைபெறவில்லை . இதனால் யானைகள் தாங்கள் இருக்கும் இடத்திலே மாதக் கணக்கில் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. 

யானைகள் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி அதன் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கட்டுப்பாடுகள் காரணமாக யானைகளால் நடைப்பயிற்சிக்கு செல்ல முடியாத சூழல் உள்ளதால் அதன் உடல் நலன் மிகவும் பாதிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருச்சுர் மற்றும் பாலக்காட்டில் இந்த ஆண்டு மட்டும் 10 யானைகள் உயிரிழந்துள்ளன. நவம்பர் 2018 ஆம் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பில் கேரளாவில் 519 யானைகள் இருந்துள்ளன .தற்போது அந்த எண்ணிக்கை 453 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story