விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை: மேகாலய கவர்னர்


விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை: மேகாலய கவர்னர்
x
தினத்தந்தி 24 Nov 2021 2:42 PM GMT (Updated: 24 Nov 2021 2:42 PM GMT)

விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று மேகாலய கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

ஷில்லாங்,

விவசாயிகளின் தொடர் போராட்டத்தையடுத்து,  மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் போன்ற மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ள விவசாயிகள், நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு வாபஸ் பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். 

மூன்று வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மேகாலயா மாநில கவர்னர் சத்யபால் மாலிக் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேகாலயா கவர்னர் சத்யபால் மாலிக் கூறுகையில் ‘‘விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. குறைந்தபட்ச ஆதார விலை அவர்களின் அடிப்படை கோரிக்கை. அரசு அதை ஏற்றுக்கொண்டு, நடைமுறைப்படுத்த கமிட்டி அமைக்க வேண்டும். இதை அரசு செய்தால், விவசாயிகள் அவர்களுடைய போராட்டத்தை திரும்பப் பெறுவார்கள்.

குறைந்தபட்ச ஆதார விலை குறித்து விவசாயிகளுக்கு உத்தரவாதம் கிடைக்க, அவர்களுடைய பிரச்சினையை ஆராய, அவர்கள் வீட்டிற்குச் செல்ல கமிட்டி அமைக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். தேவையில்லாமல் போராட்டத்தை நீட்டிக்க வேண்டாம் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்துகிறேன். எம்.எஸ்.பி.  அவர்களுடைய கோரிக்கை. நான் அந்த விசயத்தில் அவர்களோடு இருக்கிறேன்” என்றார். 


Next Story